மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை கருத்தில் கொள்ளாத வீடமைப்பு திட்டங்கள்

Written By avathani Media Network on Sunday, August 28, 2016

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் வழங்கப்படுகின்ற வீடுகளில் தங்களின் தேவைகள் பற்றி கவனம் செலுத்தப்படுவதில்லை என போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 

போருக்குப் பின்னர் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற அமைப்புகளினாலும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 

இதனைத் தவிர இந்தியா மற்றும் ஐரோப்பிய யுனியன் உதவி வீடுகளும் அரசாங்கத்தின் தெரிவு ஊடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிடைத்துள்ளன. 

இந்த வீடுகளை பொறுத்தவரை கழிப்பறை, வீட்டு நுழைவாயில் உட்பட மாற்றுக் திறனாளிகளுக்குரிய அணுகும் வசதிகளை கொண்டதாக இல்லை. 

கிழக்கு மாகாணத்தில் தற்போது நடைபெற்று வரும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகளிலும் இந்த விடயம் மாற்றுத் திறனாளிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

மாற்றுத் திறனாளியொருவரை கொண்டுள்ள குடும்பத்திற்கு கிடைக்கும் வீடு அவருக்கு ஏற்ற வசதிகளை கொண்டதாகவே இருக்க வேண்டும் என்கின்றார் கட்டைப்பறிச்சானை சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலி போராளியான கவிதா சீவரெத்தினம் வலியுறுத்தினார். 

போரில் காயமுற்று முதுகுத் தண்டு பாதிப்புக்குள்ளான இவர் இடுப்புக்குக் கீழ் உணர்ச்சியற்ற நிலையில் தற்போது மாற்றுத் திறனாளி என்ற அடையாளத்துடன் சமூகத்தில் காணப்படுகின்றார். 

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணி முன்னிலையில் போர் காரணமாக மாற்றுத் திறனாளியானோர் தொடர்பான பிரச்சினைகளை முன் வைத்த அவர், தங்களுக்கு வழங்கப்படுகின்ற வீடுகள் மாற்றுத் திறனாளிகளுக்குரிய அனுகும் வசதிகளை கொண்டதாக இருக்கும் என அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் கூறப்பட்டிருந்த போதிலும் ஏனையவர்களைப் போன்றே தங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். 

கழிப்பறை, நுழைவாயில், நீர் மற்றும் மின்சார வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்லும் வசதிகளுடன் எதிர்காலத்தில் அமையவுள்ள வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் கவிதா சீவரெத்தினம் வலியுறுத்தினார். 

புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றம் மீள் குடியேற்ற அமைச்சினால் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 10 ஆயிரம் வீடுகள் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர 7500 கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

இவை மாற்றுத் திறனாளிகளுக்குரிய அணுகும் வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி எதிர்காலத்தில் வீடுகள் மற்றும் கழிப்பறைகள் அமையும் போது மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்கின்றார். 

ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களும் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் அவர்களின் கருத்துக்களையும் பெற்று மாற்றுத் திறனாளிகளுக்குரிய வீடுகள் மற்றும் கழிப்பறைகள் அவர்களின் அணுகும் வசதிகளுடன் அமையும் என்றும் அவர் கூறினார். 

ஏற்கனவே வீடுகள் மற்றும் கழிப்பறைகளை பெற்றுள்ளவர்கள் தொடர்பாகவும் அமைச்சு கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.