தமிழ் அரசியல் கைதிகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்

Written By avathani Media Network on Friday, August 26, 2016



இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசியதாவது:

தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று கூறப்படும் மகிந்த ராஜபட்ச ஆட்சிக் காலத்தில்கூட சிறையிலிருந்து 11,000 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், புதிய அரசு பதவியேற்று 18 மாதங்களாகியும் இந்த விவகாரத்தில் எதுவும் செய்யவில்லை.

தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இலங்கையின் சட்டப் புத்தகத்தில் இருப்பதற்குத் தகுதியற்ற சட்டம் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு கூறியது. ஆனால் அதே சட்டத்தின் கீழ் எந்தவிதக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல் சுமார் 250 பேர் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதத்துக்குள் இந்த விவகாரத்துக்கு முடிவு கட்டுவதாக அரசு வாக்குறுதி அளித்தும், சிறையிலிருக்கும் அரசியல் கைதிகள் மீது குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல், அவர்களை விடுதலையும் செய்யாமல் அரசு மெளனம் காத்து வருகிறது. இதனால் கைதிகளும், அவர்களது குடும்பத்தினரும் விரக்தியடைந்துள்ளனர்.

நியாயமில்லாத சட்டம் என்று அரசே ஒப்புக்கொள்ளும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை சிறையிலடைத்திருப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?

எனவே அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார் அவர்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.