(ஊடக செய்தி )
மலையக தோட்ட பிரதேசங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் மற்றும் பெரியவர்களுக்கும் வாசித்து தமது அறிவை விருத்தி செய்து கொள்வதற்கும், உலக அறிவை பெற்றுக்கொள்வதற்கும், தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் நூல் நிலையங்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. குறிப்பாக ஒரு சில தோட்டங்களை தவிர ஏனைய தோட்டங்களில் நூல் நிலையங்கள் காணப்படுவதில்லை. அவ்வாறான ஒரு கலாசாரம் மலையக மக்களிடையேயும் காணப்படுவதில்லை. இன்றைய சிறுவர்களின் அறிவை விருத்தி செய்துகொள்வதற்கு வாசிப்பு மிக முக்கியமாகும். 'வாசிப்பே மனிதனை பூரணப்படுத்தும்' என அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே தான் மனித அபிவிருத்தி தாபனம் பிள்ளைகளின் வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தவும், அறிவையும் ஆக்கத்திறனையும் வளர்க்கவும் தோட்ட பகுதிகளில் நடமாடும் நூலகச் சேவையை ஆரம்பித்து வருகின்றது.
தோட்ட பிரதேசங்களில் நூலகக்கட்டிடங்கள் காணப்படாமையினாலும், நூல்களை பாதுகாப்பாக வைப்பதற்கும் வசதிகள் இன்மையினாலேயே நடமாடும் நூலக சேவையை நடாத்தி வருகின்றோம். இது சிறுவர்களிடேயேயும் மக்களிடையேயும் பெரும் நன்மதிப்பை பெற்று வருகின்றது என்று மனித அபிவிருத்தி தாபன தலைவர் திரு. பி.பி. சிவப்பிரகாசம், கண்டி கலஹா கித்துல்முள்ள தோட்டத்தில் நடமாடும் நூலக சேவையை ஆரம்பித்து வைக்கும்போது குறிப்பிட்டார்.
மேற்படி இந்நிகழ்வில் கித்துல்முள்ள, அப்பர் கலஹா போன்ற தோட்டங்களை சேர்ந்த பாடசாலை பிள்ளைகளும் மற்றும் பெரியவர்களும், முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.
தொடர்ந்து திரு. பி.பி. சிவப்பிரகாசம் உரையாற்றும் போது, இன்று பிள்ளைகள் புத்தகங்களை வாசிப்பதைவிட தொலைக்காட்சி பார்ப்பதிலேயே அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர். அதனால் வாதிப்புத்திறன் குறைந்து செல்கின்றது. அதேவேளை அறிவை தேடிப் பெற்றுகொள்ளும் ஆற்றலும் குறைந்து வருகின்றது. எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல், கல்வியிலே காணப்படுகின்ற போட்டிகளுக்கு சமாளிக்கின்ற முகங்கொடுகின்ற இயலுமை என்பன குறிந்து செல்கின்றன. இதனால் மலையக சமூகம் ஏனைய சமூகங்களுடன் ஓப்பிடும் பொழுது ஒரு பின்தள்ளப்பட்ட சமூகமாக காணப்படுகின்றது. அதேவேளை பெற்றார்களுக்கு இன்று அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை கொண்டு புத்தகங்களை வாங்கி பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய வாய்ப்புகளும் குறைவாகவே காணப்படுகின்றன.
அதேநேரம் நகரங்களிலே காணப்படுகின்ற நூலகங்களை தேடிச்சென்று அறிவை விருத்தி செய்துக்கொள்ளும் வாய்ப்புகளும் மலையக மாணவர்களுக்கு குறைவாகவே காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி நூலகத்தை அமைத்தல் அவற்றை பயன்ப்படுத்ததுதல், அவற்றை விருத்தி செய்தல் போன்ற கலாசாரம் மலையக மக்களிடையே பெரும்பாலும் விருத்தி பெறவில்லை. எனவேதான் மனித அபிவிருத்தி தாபனம் நடமாடும் நூலகசேவையை தோட்டங்கள் தோரும் அபிவிருத்தி செய்து வருகின்றது. இதன் மூலம் தோட்டங்களிலே இருக்கின்ற சிறுவர்களும் பெரியவர்களும் தங்களுடைய ஓய்வு நேரத்தை புத்தகங்களை பெற்று வாசிப்பதன் மூலம் பிரயோசனம் அடையலாம். இத்திட்டத்தை கித்துல்முள்ள போன்ற தோட்டங்களில் செயற்படுத்துவதற்கு இத்தோட்டத்தின் கோயில் பிரதம குருக்கள் நவனீதப்பிள்ளை சர்மா அவர்கள் முழு பங்களிப்பையும் வழங்கி வருகின்றார்கள். அதாவது சயம பணி என்பது சமூக பணி என்ற அடிப்படையில் இத்தோட்டத்தின் அறிவு கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்நடமாடும் நூலகச்சேவையை ஆரம்பிப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றார். எனவே இத்தோட்டத்திலே இருக்கக்கூடிய அல்லது பக்கத்து தோட்டங்களிலே இருக்கின்ற சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் இந்நூல்களை பெற்று வாசித்து பூரணத்துவம் அடையவேண்டும்.
குறிப்பாக சிறுமிகளும், பெண்களும் வாசிப்பது மிக முக்கியமாகும். தோட்டதுறையில் மற்றும் வேறுத்துறைகளில் தொழில் செய்யும் பெண்களுக்கு வாசிப்பதற்கான நேரம் மிக குறைவாகவே கிடைக்கின்றது. என்றாலும் அவர்கள் எப்படியாவது நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வாசித்து, அறிவை விருத்தி செய்துக்கொள்ள வேண்டும், தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மனித அபிருத்தி தாபனம் மலையக மக்களின் கல்வி மற்றும் அறிவுசார் விருத்திக்கும், விழிப்புணர்வைப் பெறுவதற்கும், மனித உரிமையை நிலைநிறுத்திகொள்ளவும், அபிவிருத்தியை செயற்படுத்துவதற்கும் கடந்த பல வருடங்களாக செயற்ப்பட்டு வருகின்ற ஒரு மக்கள் இயக்கமாகும். தொடர்ந்தும் இந்நிறுவனம் மக்களோடேயிருந்து மக்களுக்காகவே செயற்படும் ஒரு நிறுவனமாக திகழும் என திரு. பி.பி. சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.
மேற்படி நடமாடும் நூலக சேவையை ஆரம்பித்து பிள்ளைகளுக்கு புத்தகங்களை வழங்கிவைத்து உரையாற்றிய ஆலய பிரதமகுரு நவனீதபிள்ளை சர்மா அவர்கள் உரையாற்றும் பொழுது, மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் கடவுளுக்கு பணி செய்வது மாத்திரமல்ல அடியார்களுக்கும் பணி செய்ய வேண்டும். அவ்வகையில் தோட்டபிள்ளைகளுக்கு கல்வி அறிவை வழங்கினால் அதுவே பெரிய சேவையாக இருக்கும். புத்தகங்களின் மூலம் பிள்ளைகளின் ஞானக்கண்னை திறக்கலாம். அவ்வடிப்படையிலேயே மனித அபிவிருத்தி தாபனம் இச்சேவையை செய்வதற்காக கோயில் மண்டபத்தையே அறிவு சேவைக்காக வழங்க முன்வந்தோம். இந்த சேவை மலையகத்தில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் பரவவேண்டும். எல்லா பிள்ளைகளுக்கும் இவ்வரப்பிரசாதம் கிடைக்க இறைவன் அருள் கிட்டவேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதைதொடர்ந்து மனித அபிவிருத்தி தாபன திட்ட உத்தியோகத்தர் திருமதி. எம். இராமலெச்சிமி உரையாற்றும் பொழுது, இந்நடமாடும் நூலசேவை முற்றுமுழுதாக இலவசமாக வழங்கினால் அதை தொடர்ந்து கொண்டுசெல்வதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். அதேபோல் புத்தகங்கள் காணமால் போனால் அல்லது கிழிந்துப்போனால் மற்ற பிள்ளைகள் வாசிப்பதற்கான உரிமை மறுக்கப்படும். எனவே இந்த நூலக சேவையை எவ்வாறு திறம்படவும், பாதுகாப்கபாகவும், ஒழுங்காகவும் செய்யப்போகின்றோம் என்பது பிள்ளைகள் கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே பிள்ளைகளும் மற்றும் பெரியவர்களும் இதை உங்களுடைய சேவைகளாக கருதி தொடர்ந்து செயற்படுத்துவதற்கு உங்களுடைய பூரண ஒது;துழைப்பை வழங்க வேண்டும். புத்தகங்களை வாசித்து விட்டு மீள கையளிப்பதன் மூலம் மற்றோருவர் வாசித்து அறிவை விருத்தி செய்துகொள்வதற்கு நாம் பங்களிப்புசெய்ய முடியும். எனவே இத்திட்டத்தை உங்களுடைய திட்டமாக செயற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இறுதியாக மனித அபவிருத்தி தாபன கள இணைப்பாளர் திரு. ஆர். நடராஜா அவர்கள் உரiயாற்றும் பொழுது நகரங்களிலே நூலகங்கள் அமைப்பதற்கு அரசாங்கம் உதவி செய்தாலும் கூட தோட்டங்களில் நூலங்களை அமைப்பதற்கு உதவி செய்ய முன்வருதில்லை. கடந்த காலங்களிலே சில தோட்டங்களில் கணனி கல்விக்கான நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் கூட அவற்றில் பெரும்பாலானவை இன்று செயலற்றுக்கிடக்கின்றன. எனவே தான் நடமாடும் சேவை என்பது தோட்டப்பிரதேசங்களுக்கு மிக முக்கியமானதொன்றாகும். இச்சேவை ஒரு செயற்திட்டம் அல்ல. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனிப்பட்ட சிலரின் உதவியினாலேயே இந்த நடமாடும் நூலச்சேவை ஆரம்பிக்கப்படுகின்றது. இச்சேவை மேலும் வளர்வதற்கு மக்களின் ஒது;துழைப்பு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.
