பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
சூனியம் மற்றும் அல்குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் முரண்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தொடர் ஆய்வுக் கூட்டங்களின் முடிவுகள்!
கடந்த சில வருடங்களாக சூனியத்திற்கு எவ்விதத் தாக்கமுமில்லை என்றும் அதை நம்புபவர் முஷ்ரிக் என்றும் அல்குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் நாம் கூறி வந்தோம். இது தொடர்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் அர்த்தமுள்ள எதிர்வாதங்களும் முன்வைக்கப்பட்டதால் குறித்த விடயத்தை மறு ஆய்வுக்குட்படுத்துவது என்று நாம் முடிவு செய்தோம். அதன்பிரகாரம் கடந்த 18.04.2015 சனிக்கிழமை முதல் 18.07.2016 திங்கட்கிழமை வரை பல்வேறு ஆய்வுக் கூட்ட அமர்வுகள் உலமாக்களால் நடாத்தப்பட்டன. அக்கூட்டங்களில் பெறப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
01. சூனியம் என்றதொரு கலை உண்டு. அல்லாஹ் நாடினால் அதன் மூலம் தாக்கம் ஏற்படும்.
02. சூனியத்தைக் கற்பதும், கற்பிப்பதும் ஹராமாகும்.
03. சூனியம் செய்யக் கூடியவன் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யலாம் என்று நம்புவது கூடாது.
04. ஒருவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் 'அது சூனியத்தின் மூலம் தான் ஏற்பட்டது' என்று நம்புவதற்கு எந்தச் சான்றும் இல்லை.
05. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியத்தின் மூலம் பாதிக்கப்பட்டார்கள் என்பது வஹியின் மூலம் நிரூபணமானதால் அதை மாத்திரம் அப்படியே நம்ப வேண்டும்.
06. சூனியத்தின் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மெண்டலானார்கள் என்று சிலர் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட வாசகமாகும்.
07. ஆதாரபூர்வமான எந்த ஹதீஸும் அல்குர்ஆனுக்கு ஒரு போதும் முரண்படாது. முரண்படுவது போன்று தோற்ற மயக்கம் ஏற்படுத்தப்பட்டால் அவற்றை இணைத்து விளங்க வேண்டும்.
08. அல்குர்ஆனுக்கு முரண்படுகிறது என்றும் நிதர்சன உண்மைகளுக்கு முரணாக இருக்கிறதென்றும் உள்ளுணர்வுகள் ஒப்புக் கொள்ள மறுக்கிறதென்றும் காரணம் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஓரம் கட்டுவது வழிகெட்ட சிந்தனையாகும்.
09. 'குர்ஆனுக்கும் நிதர்சன உண்மைக்கும் முரண்படுகிறது' என்று காரணம் கூறி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மறுத்த அத்தனை நபிமொழிகளும் அநியாயமாக மறுக்கப்பட்டவைகளே என்பது எமது நிலைப்பாடாகும்.
10. கடந்த காலத்தில் சூனியத்திற்கு எவ்விதத் தாக்கமுமில்லை என்றும், சூனியத்தை நம்புபவர் முஷ்ரிக் என்றும், அல்குர்ஆனிற்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் முரண்பட்டால் அவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் நாம் கூறி வந்த கருத்துக்கள் எமது மறு ஆய்வின் மூலம் தவறானவைகள் என நிரூபணமானதால் அக்கருத்துக்களிலிருந்து நாம் முழுமையாக வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
11. சூனியம் மற்றும் அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் தொடர்பில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் இன்ஷாஅல்லாஹ் தனித்தனியாக மறுப்பு வெளியிடப்படும்.
12. சூனியம் மற்றும் மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர்பில் யாராவது எம்முடன் விவாதிக்க விரும்பி எமது ஜமாஅத்தை முறையாகத் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களுடன் அழகிய முறையில் விவாதிக்க தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்றும் தயாராக உள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாகப் புரிந்து நேர்வழியில் நடக்க எம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக!
இவ்வண்ணம்
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் குழு
296, மீன்பிடி இலாகா வீதி, புதிய காத்தான்குடி, இலங்கை.
18.07.2016

