பகல் கொள்ளையாக மாறிவரும் 'மஃமூம் காசு' வசூல்.

Written By avathani Media Network on Friday, July 1, 2016



ரமழான் மாதம் வந்து விட்டால் இராக்கால வணக்கங்களில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். இவ்வணக்க வழிபாடுகளில் முதன்மையான வணக்கமாக 'கியாமுல் லைல்' தொழுகை உள்ளது. இத்தொழுகையினை வழி நடாத்துவதற்கு பெரும்பாலும் குர்ஆனை மனனம் செய்த காபிழ்கள் பெரும்பாலான பள்ளிவாசல்களில் விசேடமாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான ஒரு சிறப்புக் கொடுப்பனவுதான் நமதூர் வழக்கில் 'மஃமும் காசு' எனப்படுகிறது. 

பல வருடங்களுக்கு முன் நோன்பு பெருநாள் தினத்தில் பள்ளிவாசலுக்குள் ஒரு வெள்ளைப் புடவையினை விரித்து வைத்து நிர்வாகிகள் சூழ அமர்ந்து கொள்வார்கள். பெர்நாள் தொழுகை தொழ வருபவர்கள் அவரவர் வசதிக் கேற்றவாறு தமக்கு முடியுமான பணத்தினை மனமுவந்து அந்த விரிப்பிலே போட்டுவிட்டுச் செல்வார்கள். ஈற்றிலே அந்தப் பணத்தினை குறித்த காபிழ்களுக்கும் முஅத்தினுக்கும் பகிர்நதளிப்பார்கள். இப்படித்தான் முன்னொரு காலத்தில் 'மஃமும் காசு' வசூல் செய்யப்பட்டது.

பிற்காலத்தில் இந்த நடைமுறை வழிகேடு (பித்அத்) என பல உலமாக்களால் சுட்டிக் காட்டப்பட்டதாலும் தற்போது பொதுமக்கள் திடல் தொழுகையில் அதிக ஆர்வம் காட்டுவதாலும் இந்த நடைமுறை காலப்போக்கில் வழக்கொழிந்து போனது. 

ஆனாலும் இந்த 'மஃமும் காசு' என்பது ஜம்மியதுல் உலமாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாயல்களில் தற்போதும் வேறு வடிவில் வசூல் செய்யப்படுகின்றது. அதாவது மஹல்லாதோறும் வீடு வீடாகச் சென்று குறித்த ஒரு தொகையினை நிர்ணயித்து பலவந்தமாக இந்த வசூல் செய்யப்படுகின்றது. 

இது உண்மையில் எல்லா மக்களாலும் மனமுவந்து கொடுக்கப்படுகிறதா? என்பது பாரிய கேள்விக் குறி. குறிப்பிட்ட சில பள்ளிவாயல்கள் இவ்வருடம் ரூபா. 500.00ஐ நிர்ணயித்து வசூல் செய்கிறார்கள். இந்த வசூலிப்பில் நேரடியாக நிர்வாகத்தினரே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். இந்த தொகையினை நிர்ணயிப்பது யார்? இத்தொகை ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அத்தனைபேரிடமும் அறவிடப்படுகின்றது. 

இப்படி தொகை நிர்ணயம் செய்து வசூலிப்பதால் பணக்காரர்களுக்கு இலகுவாகவும் ஏழைகளுக்கு அது பெரும் சுமையாகவும் மாறிவிடுகின்றது. இத்தொகையை கொடுக்க முடியாதவர்களுக்கு கஞ்சி, உழ்ஹிய்யா இறைச்சி மற்றும் பேரீச்சம் பழம் போன்ற வருடத்தில் ஒரு தரம் பள்ளி வாயலால் கொடுக்கப்படுகின்ற பொருட்களை காரணம் காட்டி ஒருவகை மிரட்டலுடன் இப்பணம் பறிக்கப்டுகின்றது. 

'மஃமும் காசு' என்பது ஒரு அன்பளிப்பாகும். அதனை மனமுவந்து மக்கள் கொடுக்க வேண்டும். ஆனால் இன்று பெரும்பாலான மக்கள் முகம் சுழித்தவர்களாகவே இந்த காசை வழங்குகின்றனர். 

இது ஒரு புறமிருக்க இந்த பள்ளி வாசல்களில் வெறும் ஒன்று அல்லது இரண்டு வரிசைகளில்தான் கியாமுல் லைல் தொழும் மக்களைக் காண முடிகின்றது. பெரும்பாலான மக்கள் தௌஹீத் பள்ளி என்று அடையாளப்படுத்தப்பட்ட பள்ளிவாயல்களுக்குச் சென்று விடுவதாகவும் அறிய முடிகின்றது. எனவே, தொழ வராதவர்களிடம் 'மஃமும் காசு' அறவிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. 

அதுமாத்திரமல்ல. இவ்வாறு சேகரிக்கின்ற பணம் குறிப்பிட்ட ஹாபிழ்களுக்குத்தான் முழுமையாக சென்றடைகின்றனவா? என்பதும் பாரிய கேள்விக் குறியாகும். உதாரணமாக 300 குடும்பங்கள் உள்ள ஒரு மஹல்லாவில் ரூபா 500.00 வீதம் சேகரித்தால் 150000.00 வரும். 

இந்த பணம் உண்மையில் அவர்களுக்குத்தான் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதை எந்த ஒரு நிர்வாகியாலும் உறுதி செய்ய முடியுமா? அவ்வாறு சரியாக கொடுக்கப்படுமானால் பள்ளிவாயல்கள் 'மஃமும் காசு' சம்பந்தமான கணக்கறிக்கைகளை ஏன் வெளியிடுவதில்லை? 

எது எவ்வாறு இருந்த போதிலும் ஜம்மியதுல் உலமா இது சம்பந்தமாக ஒரு ஒழுங்கமைப்புக்கு தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாயல்களை வழிநடாத்துவதோடு கணக்கறிக்கையினை கண்டிப்பாக காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்துதல் வேண்டும்.

அமான்.. 
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.