தேசிய முஸ்லிம் கவுன்சில் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து

Written By avathani Media Network on Wednesday, July 6, 2016

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எதிராக பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒற்றுமைப்பட திடசங்கற்பம் பூணுவோம் என்று தேசிய முஸ்லிம் கவுன்சில் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுன்சில் தலைவர் எம்.ஐ.எம்.வலீத், தேசிய அமைப்பாளர் முஸ்தாக் முஹம்மட், பொருளாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் கூடடாக வெளியிட்டுள்ள அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடபட்டிருப்பதாவது;

முஸ்லிம்கள் தமக்குள் ஒற்றுமைப்படாமல் பிரிந்து செயற்படுவதன் காரணமாகவே தேசிய, சர்வதேச மட்டத்தில் பல்வேறு வகையிலும் நாம் நசுக்கப்பட்டு வருகின்றோம்.

பல அரபு, முஸ்லிம் நாடுகள் இன்று மேற்குலக சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றன. குறிப்பாக அந்த நாடுகளின் பொருளாதார வளத்தை கபளீகரம் செய்வதற்காகவும் இஸ்லாம் மார்கத்தின் எழுச்சியை தடுப்பதற்காகவும் பாரிய சூழ்ச்சித் திட்டங்களை அந்த சக்திகள் அரங்கேற்றி வருகின்றன. அதில் ஒரு முக்கிய அங்கமே ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதமாகும்.

அரபு, முஸ்லிம் நாடுகளில் தோன்றுகின்ற உள்நாட்டு சமூக முரண்பாடுகளை இந்த சர்வதேச– ஏகாதிபத்திய சக்திகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதை நாம் கண்கூடு காண்கின்றோம்.

நமக்குள் எழுகின்ற பிரிவினைகளே சூழ்ச்சிக்காரர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றன என்பதை உலகில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களும் பொறுப்புடன் சிந்தித்து உணர வேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட அனைத்து பேதங்களையும் மறந்து இஸ்லாமியர் என்ற ஒரே வரையறைக்குள் எம்மால் ஏன் ஒற்றுமைப்பட முடியாதுள்ளது என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆகையினால் ரமழான் முழுவதும் நோன்பு நோற்று இறையச்சத்துடன், சமூகக் கட்டுக்கோப்புக்கு பயிற்றுவிக்கப்பட்ட நிலையில் பெருநாளைக்கு கொண்டாடுகின்ற நாம் சமூக மாற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் வேண்டிய அனைத்து வகையான முயற்சிகளையும் முன்னெடுக்க உறுதி பூணுவோம். -ஈத்முபாரக்-
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.