(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடியை தளமாகக்கொண்டு இயங்கி வருகின்ற தேசிய தவ்ஹீத் ஜமாஅத், இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவிலும், தெளிவான முறையிலும் மக்களுக்கு பிரச்சாரம் செய்வதோடு மாத்திரம் நின்று விடாமல் இஸ்லாம் கூறும் சமுதாயப் பணிகளிலும் முடியுமான வரையில் கவனம் செலுத்தி வருகின்ற ஒரு அமைப்பாகும்.
அந்தவகையில் கடந்த 11.03.2016 அன்று காத்தான்குடியைச் சேர்ந்த யுஸ்ரி என்னும் பத்து வயதையுடைய சிறுமி தனது தந்தையின் மௌன அங்கீகாரத்துடன் வளர்ப்புத் தாயினால் சூடு வைக்கப்பட்டு தீச்சூட்டுக் காயங்களுக்கு உள்ளான போது நாம் அதனைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக் கூடாது எனக் கோரியும் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்ற
ை நடாத்தியிருந்தோம்.
இதன் பிற்பாடு காத்தான்குடியை அண்மித்த ஏறாவூர், பாலமுனை போன்ற பிரதேசங்களிலும் இதே போன்று சிறுவர்கள் அவர்களின் பராமரிப்பாளர்களினால் தீச்சூட்டுக் காயங்களுக்குள்ளான செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தன.
இச்செய்திகளை கேள்விப்பட்ட சிலர் "இதற்கும் NTJ ஆர்ப்பாட்டம் செய்யுமா? நீதி வேண்டிச் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் பாரபட்சம் பார்ப்பது நியாயமா?" "அத்வைதிகள் தவறு செய்தால் மாத்திரம் தான் NTJ ஆர்ப்பாட்டம் செய்யுமா?" "இது அத்வைதிகள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியல்லவா?" என்பன போன்ற விமர்சனக் கேள்விகளை சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகைகள் வாயிலாகவும் பரப்பி வருகின்றனர்.
பொதுவாகவே சிறுவர்களுக்கு தீச்சூடு வைக்கின்ற வன்முறை மாத்திரமல்ல, சிறுவர்களுக்கெதிரான, பெண்களுக்கெதிரான வன்முறைகள் பலவும் நாளுக்கு நாள் பிரதேசத்திற்கு பிரதேசம் மிகவும் தாராளமாகவே நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. நாமும் அவற்றை நாள் தவறாமல் ஊடகங்கள் வாயிலாகவும், தனிநபர்கள் தருகின்ற தகவல்கள் மூலமாகவும் கேள்வியுற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் இவ்வாறு நாள்தோறும் நடந்தேறுகின்ற அனைத்து விதமான வன்முறைகளுக்கு பின்னரும் நீதிமன்றங்களுக்கும், பொலிஸ் நிலையங்களுக்கும் முன்னால் நின்று, பொது மக்களை ஒன்றிணைத்து, சுலோகங்களை கையிலேந்திக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடாத்த வேண்டுமா? என்றால் அவ்வாறானதொரு அவசியம் கிடையாது.
அது அறிவுடமையாகவும் இருக்காது.
சமுதாயத்தில் நாள்தோறும் அரங்கேற்றப்படுகின்ற வன்கொடுமைகள், சமூக அநீதிகள் என்பவற்றையும் அவற்றை அரங்கேற்றுகின்ற நபர்களையும் இரண்டு விதமாக நாம் வகைப்படுத்துகிறோம்.
ஒன்று:
சமுதாயத்தில் எதுவித விஷேட பெறுமானங்களும், அரச மட்டங்களில் யாதேனும் ஒரு செல்வாக்குகளும் இன்றி சாதாரண வாழக்கை வாழ்கின்ற நபர்கள் மேற்கொள்கின்ற வன்செயல்கள்.
இப்பேர்ப்பட்டவர்கள் மேற்கொள்ளக் கூடிய சிறிய, பெரிய குற்றங்கள் எதுவாக இருப்பினும் அவற்றுக்கெதிராக சமூகநல அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகங்கள் நடாத்தித்தான் அவர்களை கைது செய்யவேண்டும் என்பதோ, தண்டனைகள் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்னும் நிர்ப்பந்தமோ ஒரு போதும் கிடையாது. மாறாக அவை மிகவும் இலகுவாகவே காவல்த்துறை மற்றும் நீதித்துறையினருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, துரிதகதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு, தாமதிக்காமல் தண்டனைகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டு விடுகின்றன.
இரண்டு:
சமூகத்தில் அரசதுறைகளில், காவல் நிலையங்களில் செல்வாக்குள்ள நபர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள், சமூக அநீதிகள். இந்த நபர்களை பொறுத்த வரைக்கும் இவர்கள் மேற்கொள்கின்ற வன்செயல்களின் விடயத்தில் காவல்த்துறையினர் சுதந்திரமாகவும், கடமை உணர்ச்சியோடும் செயற்படுவது அரிதானது. குறித்த நபர்களுக்கு சமுதாயத்திலும், அரச துறைகளிலும் கோலோச்சிக் காணப்படுகின்ற செல்வாக்குகளை பயன்படுத்தி அவர்களுடைய குற்றச்செயல்கள் காவல்த்துறையினராலேயே கணிசமான விலைகள் பேசப்பட்டு மூடிமறைக்கப்படு
கின்ற நடைமுறைகளை நாம் காண்கிறோம்.
மேலும் தன்னிடமுள்ள அரசியல் பலத்தை முறைகேடாகப்பயன்
படுத்தி, காவல்த்துறையையும், சட்டத்துறையையும் விலை கொடுத்து வாங்கி அதன் மூலம் அநீதியாளர்கள் பலரும் நீதியின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கின்ற அவல நிலைமைகளை நாள்தோறும் நாம் காண்கிறோம்.
இவ்வாறு சமுதாயத்தில் செல்வாக்குள்ள நபர்கள் மேற்கொள்கின்ற அநீதிகள் சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய காவல்த்துறையினராலேயே அவர்களுடைய சுய லாபங்களுக்காக மூடி மறைக்கப்பட்டு, அடைகாக்கப்படுகின்ற போது அதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்கள் எதிர்பார்கின்ற சட்டரீதியான குறைந்தபட்ச நியாயம் கூட கிடைக்காமல் போய்விடுகிறது. அவ்வாறு அடைக்கலம் அளிக்க வேண்டிய காவல்த்துறையினராலேயே அநீதி இழைக்கப்படுகின்றபோது அதற்கெதிராக மக்கள் பலங்கொண்ட அழுத்தங்கள் அவசியமாகின்றன. அதைத்தான் தேசிய தௌஹீத் ஜமாஅத் மேற்கொண்டு வருகிறது.
சமுதாயத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்கள் தவறிழைத்தால் அவர்களுக்கு ஒரு நியாயமும், தாழ்மட்டத்திலுள்ள நபர்கள் தவறிழைத்தால் அந்நபர்களுக்கு பிறிதொரு நியாயமும் என்ற இறைவனின் சாபத்துக்குரிய நடைமுறைக்கெதிராக தேசிய தௌஹீத் ஜமாஅத் களத்தில் இறங்கி போராட்டம் நடாத்துகிறது.
அந்த வகையில்தான் இறுதியாக தேசிய தௌஹீத் ஜமாஅத் நடாத்திய ஆர்ப்பட்டமும் இவ்வாறு காவல்த்துறையினரால் மூடிமறைக்க எத்தனிக்கப்பட்ட ஒரு சமூக அநீதியாகவே இருந்துள்ளது என்பதை பொதுமக்களும் இவ்விவகாரத்தில் எம்மை விமர்சிக்கின்ற விமர்சகர்களும் தெளிவாகப்புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
தேசிய தௌஹீத் ஜமாஅத் நீதிக்காக ஆர்ப்பாட்டம் நடாத்திய யுஸ்ரி என்னும் சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவரும் அதற்கு பக்கபலமாக இருந்தவரும் முறையே காத்தான்குடி பிரதேசத்தில் அதியுட்சபட்ச அரசியல் செல்வாக்கை தன்கைவசம் வைத்துள்ள அத்வைத சமூகத்தின் வழிகாட்டிகளில் ஒருவரான மஜீத் ரப்பானியும், அவருடைய மனைவியும் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
இவர்கள் தம்மிடமுள்ள அரசியல் செல்வாக்கை சாதகமாகவும் முறைகேடாகவும் பயன்படுத்தி கடந்த காலங்களில் எப்பேர்ப்பட்ட அநீதிகளை எல்லாம் தமக்கு சாதகமாக மூடி மறைத்துள்ளார்கள் என்பதை இப்பிரதேசமே நன்கறியும். அந்த வகையில் இந்த சூடு வைப்பு விவகாரம் கூட அந்த வன்கொடுமைக்கு வருடக்கணக்கில் துணையாக நின்ற மஜீத் ரப்பானியை பொலிசார் கைது செய்துவிடக் கூடாது என்பதற்காக பலதரப்பட்ட முயற்சிகளும், முன்னெடுப்புக்க
ளும் நடந்தே வந்துள்ளன. பத்து வயது சிறுமியின் உடலில் ஈவிரக்கம் என்பது சிறிதும் இன்றி சூட்டுக் காயங்களை ஏற்படுத்தியவர் வளர்ப்புத் தாய் மும்தாஜாக இருந்தாலும், "அநீதிக்குத் துணை போனார்" எனும் வகையில் அவரது கணவரான மஜீத் ரப்பானியும் சேர்த்தே கைது செய்யப்படவேண்டியவர் என்பதில் நீதித்துறையிடம் மாற்றுக்கருத்தில்லை.
ஆனாலும் மஜீத் ரப்பானியை முதலில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலிலிருந்தும், பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்தும் வெளியில் கொண்டு வருவதற்காக பலதரப்பட்ட முயற்சிகளும் பரவலாகவே மேற்கொள்ளப்பட்டதை காத்தான்குடி வாழ் சமூகமே நன்கறியும். இதற்காக அக்கொடுமைக்காரர்களின் ஆதரவாளர்கள் தமது அரசியல் செல்வாக்கையும், ஆன்மீகம் என்ற போர்வைக்குள் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய கண்மூடித்தனமான குருட்டு பக்தியையும் மூலதனமாகவும், முறைகேடாகவும் பயன்படுத்தி காவல் துறையையும், நீதித் துறையையும் தம்பக்கம் திசை திருப்பி "முகந்திறந்து விட்ட அநீதியை மூடி மறைக்க முற்படுகிறார்கள்" என மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள் எம்மை வந்தடைந்த காரணத்தினால் அதன்மூலம் எமக்கு ஏற்பட்ட பலமான சந்தேகத்தின் அடிப்படையிலேயே நாம் அந்த ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கினோம்.
எல்லாம் வல்ல இறைவனின் பேருதவியால் அந்த ஆர்ப்பாட்டமும் எதிர்பார்த்தளவுக்கு பலனைத் தந்தது, அல்ஹம்துலில்லாஹ்!
எனவே "மெளலவி மஜீத் ரப்பானி என்பவர் அத்வைதக் கொள்கையில் இருப்பதால்தான் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தது. ஏனையோர்கள் விடயத்தில் இந்த ஜமாஅத் மௌனம் காக்கிறது" என்ற விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல. எம்மைப் பொறுத்தவரைக்கும் சமூகக் கொடுமையை அரங்கேற்றுகின்ற குற்றவாளி அக்குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்கின்ற அவனுடைய சமுதாய செல்வாக்கின் வீரியத்தைத்தான் கவனத்தில் கொள்கின்றோமே தவிர அவனுடைய மார்க்க ரீதியான, அரசியல்ரீதியான கொள்கைகளை, நிலைபாடுகளை நாம் ஒருபோதும் பார்ப்பதில்லை.
கடந்த 05.02.2015 அன்று புதிய காத்தான்குடி ஷுஹதா வீதியைச் சேர்ந்த ஹாமிது லெப்பை என்பவன், M.A அஷ்பாக் எனும் நான்கு வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த விவகாரம் எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ஹாமிது லெப்பை என்பவன், தான் செய்த குற்றத்தை, காவல்த்துறையில் தனக்கிருக்கும் செல்வாக்கை மூலதனமாக வைத்து தப்பிக்க நினைத்தான். தான் குடியிருந்த சொந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு இடம் சென்று தலை மறைவானான். அவன் தலைமறைவாக இருக்கும் இடத்தை காவல் துறைக்குச் சுட்டிக் காட்டி "அவனைக் கைது செய்யுங்கள்" என பாதிக்கப்பட்ட சிறுவனுடைய குடும்பத்தார் வலியுறுத்தியும் கூட பொறுப்புமிக்க காத்தான்குடி பொலிசார் அவனைக் கைது செய்யாமல் போக்குக்காட்டி வந்தனர்.
இறுதியாக அந்த காமக்கொடூரனை கைது செய்கின்ற விடயத்தில் காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வந்த அநியாயத்தை தட்டிக் கேட்பதற்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொதுமக்களை ஒன்று திரட்டி நாம் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்வதாக பகிரங்கமாக அறிவித்தோம். உடனே பொலிஸார் எம்மைத் தொடர்பு கொண்டு "ஆர்ப்பாட்டத்தைக் கை விடும் படி" கோரினார்கள். "குற்றவாளியைக் கைது செய்யாத வரை ஆர்ப்பாட்டத்தை கை விடமாட்டோம்" என தெளிவாக எடுத்துரைத்தோம். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆர்பாட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகளிலும் நாம் ஈடுபட்டோம். உடனே சுதாதரித்துக்கொண்ட காத்தான்குடி பொலிசார், குற்றச்செயலில் சம்பந்தப்பட்ட ஹாமிது லெப்பையைக் கைது செய்து விட்டு "சந்தேக நபரை கைது செய்துவிட்டோம்! ஆர்ப்பாட்டத்தை கை விடுங்கள்!" என எம்மிடம் கோரினார்கள். சந்தேகநபர் கைதான செய்தியை நேரடியாக நாம் உறுதிப்படுத்திய பின்னர்தான் ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. பின்னர் ஹாமிது லெப்பை குற்றவாளியென நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.
இங்கு ஹாமிது லெப்பை என்பவன் அத்வைதக் கொள்கையில் உள்ளவனோ, எமக்கெதிரான அரசியல் கொள்கையில் உள்ள ஒருவனோ அல்ல! இருந்தும் குற்றத்தைச் செய்து விட்டு தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தண்டனையிலிருந்
து தப்பிக்க முயன்றதால் நாம் ஜனநாயக வழியில் நின்று, அவனுக்கெதிராகப் போராடி தண்டனையை வாங்கிக் கொடுத்தோம்.
அண்மையில் ஏறாவூர், பாலமுனை போன்ற பிரதேசங்களில் சிறுவர்களுக்கு எதிராக கொடுமைகளை நிகழ்த்திய கொடூரர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் சமூகத்தில் விசேடமான செல்வாக்கோ, பண பலமோ அற்றவர்கள். அதனால் தான் அவர்களைக் கைது செய்வதிலோ, சிறையில் அடைப்பதிலோ காவல் துறைக்கும் நீதித் துறைக்கும் எவ்வித சவாலும் இருக்கவில்லை.
அதன்காரணமாக எமக்கும் அவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தவோ, போர்க்கொடி தூக்கவோ எந்தவொரு அவசியப்பாடுகளும் ஏற்படவில்லை.
அதேபோன்று சமுதாயத்தில் நாளாந்தம் நிகழ்ந்தேறும் அனைத்துக் கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பது அறிவுபூர்வமான செயல் அல்ல. மாறாக அந்தக் கொடுமைகளையும், கொடுமையை நிகழ்த்தியோர் தண்டனையிலிருந்து தப்பிக்க முயலும் வழி முறைகளையும் துல்லியமாக பகுத்தறிந்ததன் பிற்பாடே அவர்களுக்கும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்குமான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்ய முடியும். அவ்வாறான ஆர்ப்பாட்டங்கள்தான் அர்த்தமுள்ளதாகவும், பயனளிப்பதாகவும், பாதிப்படைந்தவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாகவும் அமையும். இந்த வேறுபாட்டைப் புரியாதவர்கள் "இதற்கு ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை? அதற்கு ஏன் NTJ ஆர்ப்பாட்டம் செய்யவில்லை?" என பத்தாம் பசலித்தனமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமூகத்தில் நிகழ்ந்து வரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் NTJ ஆர்ப்பாட்டம் செய்யாவிட்டாலும், அனைத்துக் கொடுமைகளையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் வன்மையாகக் கண்டித்து வருகின்றது எனும் பேருண்மை மாத்திரம் ஏனோ இவர்களின் பார்வை புலன்களுக்கு புலப்பட மறுக்கின்றது.
எனவே சமூகத்தில் ஒரு குற்றச்செயல் நடைபெறுகின்றபோது அது காவல்த்துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றால் எவ்வாறு கையாளப்படுகிறது என்னும் அடிப்படையான ஆய்வினை வைத்துத்தான் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களும், வெகுசன ரீதியான எதிர்ப்புக்களும் வெளிக்கொணரப்படுகின்றன என்னும் யதார்த்தத்தை புரிந்துகொள்வது அவசியமானது.
-ஊடகப்பிரிவு,
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்
25.06.2016

