கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யக் கோரி, மாணவர்கள் இன்று திங்கட்கிழமை பாடசாலை கதவை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாடத்தில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.
ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 1ஏபி தரத்தினைக் கொண்ட இப் பாடசாலையில் சுமார் 2000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
எனினும், இங்கு 100 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. இவ் வருடம் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றம் காரணமாக தற்போது 62 ஆசிரியர்கள் மாத்திரமே இப் பாடசாலையில் உள்ளனர்.
இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்தனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் வலயக் கல்விப் பணிப்பாளரே மாணவர்களின் கல்வியைச் சீரழிக்காதே, பிரதேச அரசியல்வாதிகளே மக்களை ஏமாற்ற வேண்டாம், மாகாணக் கல்விப் பணிப்பாளரே இனப் பாகுபாடு எதற்கு?, வலயக் கல்விப் பணிப்பாளரே வலயத்தை சீரழிக்காதே, மாகாணக் கல்விப் பணிப்பாளரே ஆசிரியர் இடமாற்றத்துக்கான பதிலீடு எங்கே? எப்போது?, எதிர்கால அரசியலுக்காக மாணவர்களின் கல்வியை சீரழிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இது தொடர்பாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜாவிடம் கேட்ட போது,
கல்குடா கல்வி வலயத்தில் இந்த பாடசாலை மாத்திரமல்ல செங்கலடி மத்திய கல்லூரி, வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயம், சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம், கிரான் மகா வித்தியாலயம், வாழைச்சேனை இந்துக் கல்லூரி, களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது.
இதனால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு உடனடியாக ஆசிரியர் ஆளணியை வழங்கக்கூடிய கடமைப்பாடு உள்ளது. இந்த விடயம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், கல்விப் பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளேன்.
இன்னும் 15 நாட்களுக்குள் இந்த பாடசாலைக்கு 15 ஆசிரியர்களை வழங்குவதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார். மிக விரைவில் இந்த பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மேலும் இந்த வருட இறுதிக்குள் புதிய ஆசிரியர் நியமனத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் போது இந்த பாடசாலைக்கு முழுமையான ஆசிரியர்கள் வழங்கப்படும்” என்றார்.
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கல்குடா கல்வி வலயத்திற்குட்ட பாடசாலைகளில் கல்வி நிலை பாதிப்படைவதால் மாணவர்கள் முதல் பெற்றோர்கள் வரை வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான நிலை இன்னும் இடம்பெறாமல் இருக்க கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


