(அஸ்ஹாபுல் கஹ்ப்)
NFGGயானது அரசியலில் இன்று பாரிய புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்திக்
கொண்டிருக்கிறது. தூங்கி கிடந்த நல்லாட்சி விழுமிய அரசியலின் பண்புகளை
மக்களை நோக்கி அறிவுருத்தி வருவதுடன், பல்லின கலாசார நாடு ஒன்றில்
முடிந்தளவு தூரம் செயற்படுத்தியும் வருகிறது. இது உணர்ச்சிகளால்
மாத்திரம் தூக்கி நிறுத்தப்பட்ட முஸ்லிம் அரசியல் ஒழுங்கினை
மாற்றத்துக்கு கொண்டு வரும் ஆரம்ப முயற்சியே என்பதனை மனதில் கொள்ள
வேண்டும். இந்த விடயம் சிலவேளை முஸ்லிம் அரசியலின் பெயரால் நாடகமாடிவரும்
கட்சிகளை பொறுத்தவரை சவாலாகவே அமையும்.
சுமார் பத்து வருட கால வரலாற்றை கொண்ட NFGG ஆரம்பம் முதல் பத்திரிகை
மூலமாக மக்களை அறிவூட்டும் பணியினை செய்து வருவதானது வரவேற்கத்தக்க
வேண்டிய விடயமாகும். "புதிய நாளை " என்ற பெயரில் ஒவ்வொரு
காலகட்டத்திலும் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகளை உள்ளடக்கி
இப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இங்கு அவதானிக்க
வேண்டிய விடயம் இடைவிடாது இந்தப் பத்திரிகை இலவசமாக
விநியோகிக்கப்படுகிறது என்பதே ஆகும். மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை
தராவிட்டாலும் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது பிரச்சினை
ஏற்படும் போது நாங்கள் கைகொடுப்போம், அதற்கான தீர்வுகளை மக்கள் முன்
கூறுவோம் என்ற உறுதி என்பன பாராட்டப்பட வேண்டிய விடயங்களாகும். இந்த
தொடர்ச்சியான மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் NFGG மீதான நம்பிக்கையினை
கட்டியெழுப்புகிறது.
இந்த இடத்தில் ஒரு விடயத்தினை ஞாபகமூட்ட வேண்டும். கடந்த ஜனாதிபதி
தேர்தல் பிரச்சாரங்களின் போது பல ஆயிரக் கணக்கான புதிய நாளை பத்திரிகைகளை
தங்கள் சொந்த நிதி மூலமாக அச்சிட்டு வெளியீடு செய்தமையானது மிகவும்
துணிச்சலான செயலே ஆகும். மக்கள் ஆணை பெற்ற முஸ்லிம் நாமம் கொண்ட அரசியல்
தரப்புகளெல்லாம் கடந்த அரசை விமர்சிக்க பயந்த வேளை துணிச்சலாக ஆட்சி
மாற்றமொன்றிற்காக பகிரங்கமாக பணியாற்றியது வரலாற்றுப் பதிவாகவே
நோக்கப்படல் வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக பத்திரிகை மூலமாக அறிவூட்டல் செய்வதென்பது மக்கள்
மத்தியில் எந்தளவு தூரம் தாக்கம் செழுத்துகிறது என்பதனை மீள்பரிசீலணை
செய்ய வேண்டிய தேவையும் NFGG யிற்கு அவசியமாகிறது. அவ்வாறு மக்களை
அறிவூட்டல் செய்தல் வெற்றியளிக்கும் என்பதை உணர்ந்தால் மேலும் அதனை
வினைத்திறனாக மாற்றுவது எவ்வாறு என்பது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும்.
இணையதள வாசகர்களை கவர்வதற்காக PDF வடிவிலேனும் பதிவேற்றம் செய்கின்ற
முறையினை அறிமுகப் படுத்த வேண்டும்.
இன்னுமொரு முக்கியமான விடயம் இங்கு கவனிக்கப்படல் வேண்டும். இந்த
பத்திரிக்கை விநியோகம் செய்யப்படுகின்ற ஒழுங்கு. அரசியல்வாதியொருவர்
மக்களுக்காக பணியாற்ற வருகின்ற போது முதலில் தான் என்ற அகந்தையை
விடவேண்டும். படித்தவன், பதவியிலுள்ளவன் என்றெல்லாம் பாராது களத்தில்
நின்று உழைப்பவராக இருக்க வேண்டும். இந்த பண்புகள் NFGG
உறுப்பினர்களிடம் காணப்படுவது இங்கு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
பத்திரிகைகள் மற்றும் தூண்டுப்பிரசுரங்கள் விநியோகத்தில் சிறுவர்களை
ஈடுபடுத்தாமல் தாங்களே களத்தில் நிற்கின்ற ஒழுங்கு முறை
வரவேற்கப்படவேண்டியதே. இந்த விடயங்களை அறிவுபூர்வமாக சிந்திக்கும்
ஒருவர் NFGG சகோதரர்களின் அர்ப்பணிப்பை விளங்கிக் கொள்வாரகள் . எனினும்
மக்கள் இவைகளை ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையில் உள்ளார்களா ? என்பது
கேள்விக்குறியே!



