(அபூறிஸா)
அண்மைக் காலமாக 'வாரஉரைகல்' துணை ஆசிரியர் சகோ. நியாஸ் அவர்களின் 'நல்லாட்சிக்கான தேசிய முன்னணி' மீதான அவதூறுகளை தொடர்ச்சியாக முகநூலில் காணக் கூடியதாக உள்ளது. இந்த அவதூறுகள் தொடர்பான நியாயத்தன்மையினை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மே தின ஒன்று கூடலில் வார உரைகல் ஆசிரியர் புவி றஹ்மதுல்லாஹ் அவர்களை NFGG அவமதித்ததா?
கடந்த மே தின நிகழ்வினை தனது இணையத்தளத்தில் பிரசுரிக்கும் போது வார உரைகல் ஆசிரியர் புவி ரஹ்மதுல்லாஹ் அவர்களின் புகைப்படத்தினை சரியாக வெளியிடவில்லை என்ற ஒரே காரணத்தினைச் சுட்டிக் காட்டி வார உரைகல் பத்திரிகையின் துணை ஆசிரியர் சகோ. நியாஸ் அவர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரையும் அதன் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அவர்களையும் இயக்கத்தின் செயல்பாடுகளையும் மிக மோசமான முறையில் விமர்சனம்? செய்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.
குறித்த விமர்சனத்தில் கூட 'சபையில் பொது மகனாக உட்கார இருந்த புவி அவர்களை அத்தனை மக்கள் மற்றும் பிரமுகர்களுக்கு மத்தியில் NFGG யின் தவிசாளர் அப்துர் ரகுமான் அவர்கள் அழைத்து பிரமுகர்கள் வரிசையில் அமரச் செய்தததாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த மே தின ஒன்று கூடல் என்பது பூட்டிய அறை ஒன்றில் இடம் பெற்ற ஒன்றல்ல. மாறாக 1000 ற்கும் மேற்பட்டவர்கள் அதில் கலந்து கொண்டிருந்தனர். (இந்த தொகை NFGG இணையத்தளத்தை பார்ப்பவர்களை விட கூடுதலான தொகையாக கூட இருக்கலாம்) அவ்வளவு மக்கள் முன்னிலையில் சகோ. புவி அவர்களை அழைத்து தன் பக்கத்தில் அமர வைத்தமை என்பது சகோ. அப்துர் ரகுமான் அவர்களின் பெருந்தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
எதிலுமே குற்றத்தினையும் குறைகளையும் மாத்திரமே தேடியலையும் ஒரு மூன்றாம் நிலை ஊடகவியலாளனாக நியாஸ் மாறியிருப்பது மிக ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறுதான் சிறுமி யுஸ்ரிக்கு சூடு வைத்த விவகாரத்திலும் ஒரு படி மேலே சென்று பாரூக் மௌலவியினுடைய கொலையுடன் சம்பந்தப்படுத்தி தனது யூகத்தின் அடிப்படையில் ஒரு கருத்தினைப் பதிவு செய்திருந்தார்.
''ஒருவர் மீது கொண்ட வெறுப்பு அவர் பக்கம் நீதி செலுத்துவதிலிருந்து தவற வேண்டாம்' என்ற இறை வசனத்தை சகோ. நியாஸ் அவர்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
NFGG யின் ஊதுகுழலாக வார உரைகல் செயல்பட்டதா?
NFGG யின் கடந்த 10 வருடகால மக்கள் விழிப்பூட்டல் செயல்பாடுகள் மற்றும் அதனது மக்கள் தொடர்பாடல் முறைகள் என்பது தனித்துவமானது. மக்கள் சந்திப்பு, துண்டுப்பிரசுரங்கள் வாயிலாக மக்களை விழிப்பூட்டல், இரண்டு வாரங்களுக்கொருமுறை வெளிவரும் இயக்கத்தின் உத்தியோக பூர்வ வெளியீடான புதிய நாளை பத்திரிகை இயக்கத்pன் இணையத்தளம் மற்றும் வருடம் முழுவதும் திறந்துள்ள இயக்கத்தின் அலுவலகம் என எந்தவொரு அமைப்பும் வைத்திருக்காத மக்கள் தொடர்பாடல் முறைகளை தன்னகத்தே கொண்ட NFGG அமைப்பானது வார உரைகல் பத்திரிகையினால்தான் வளர்ந்தது என சொல்வது அறிவுடைமையல்ல.
NFGG யின் அரசியல் செயல்பாடுகளில் சகோ. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் செய்த பல மக்கள் விரோத செயல்பாடுகளை சுட்டிக்காட்டி மக்களை விழிப்பூட்டியிருக்கின்றது. வார உரைகல் ஆசிரியர் சகோ. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முன்னாள் தீவிர ஆதரவாளராக இருந்து ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறி தனது பத்திரிகையின் வாயிலாக தொடர்ச்சியாக ஹிஸ்புல்லாவை விமர்சித்து வருபவர்.
சகோ. ஹிஸ்புல்லாஹ் மீதான NFGG யின் விமர்சனம் வேறானது அது முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்தது. வார உரைகல்லின் விமர்சனம் வேறானது. இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தினை நடு நிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு உதாரணத்தை இங்கே குறிப்பிடுகின்றேன்.
உலமாக்கள் மற்றும் முஅத்தின்களுக்கான இலவச உம்றா திட்டம் ஒன்றினை சகோ. ஹிஸ்புல்லாஹ் அறிவித்த போது அரசியலுக்கப்பால் குறிப்பிட்ட முயற்சியனை சகோ. அப்துர் ரகுமான் ஊடகங்கள் வாயிலாக பாராட்டியிருந்தார். ஆனால் அந்த பாராட்டினை வார உரைகல் ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடந்த வாரம் வெளியிட்ட வார உரைகல் பத்திரிகை கோரிக்கை ஒன்றினை NFGG தவிசாளருக்கு முன்வைத்திருந்தது.
அது மாத்திரமல்லாமல் பல சந்தர்ப்பங்களில் NFGG இயக்கத்தினையும் அதன் தவிசாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களையும் வார உரைகல் விமர்சித்திருக்கின்றது. எனவே, வாரஉரைகல் ஒரு போதும் NFGG யின் ஊது குழலாக வெயல்பட்டவில்லை என்பதை இயக்கத்தின் ஆதரவாளன் என்ற அடிப்படையில் என்னால் கூற முடியும். ஆனால் அந்த பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்து கொண்டு சகோ. நியாஸ் அவர்கள் இக்கருத்தினை வெளியிட்டிருப்பது வார உரைகல்லின் நம்பகத்தன்மையை மக்களுக்கு நீங்களே புடம் போட்டுக் காட்டுவதாக அமையும்.
வார உரைகல்லினால் NFGG வளர்ந்ததா?.. அல்லது NFGG யினால் வார உரைகல் வளர்ந்ததா?
வார உரைகல் பத்திரிகையின் தொடர்ச்சியான வாசகன் என்ற அடிப்படையில் இந்த ஊரில் அரசியல் மட்டத்திலும் சரி சிவில் சமுக மட்டத்திலும் சரி நடக்கின்ற பல்வேறு ஊழல் மற்றும் சமுகவிரோத செயல்பாடுகளை வெளிக்கொணர்ந்ததில் வார உரைகல்லுக்கு மிகப் பெரும் பங்கிருக்கின்றது என்பதை மனதார ஏற்றுக் கொள்கின்றேன்.
ஆனால் 'வார உரைகல்' பத்திரிகை ஆசிரியர் புவி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தனது தள்ளாத வயதிலும் NFGG இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருபவர் என்று நியாஸ் குறித்த ஆக்கத்தில் குறிப்பட்டிருப்பது அதிக பிரசங்கித்தனம் என நான் நினைக்கின்றேன். காரணம் NFGG சகோ. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டிக்கும்போது நடு நிலமையுடன் பொதுவுடைமையாக அவதானித்த பலர் அதே கண்டணத்தை வார உரைகல் செய்யும் போது சுயநல விரோதமாக பார்க்கின்றனர்.
எனவே, வார உரைகல்லின் விமர்சனம் சரியாக இருந்தும் கூட பலர் அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில் எவ்வாறு NFGG யின் வளர்ச்சியில் பாரிய பங்கு வகித்திருப்பதாக கூறு முடியும். வார உரைகல் பத்திரிகையினை NFGG வளாகத்திற்குள் விற்பனை செய்வது போன்று டெலிகொம் சந்தியிலோ அல்லது ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பிரச்சார கூட்டத்திலோ விற்பனை செய்ய முடியுமா? கடந்த காலங்களில் அவ்வாறு விற்பனை செய்த பிரதம ஆசிரியருக்கு நடந்த கெதி என்ன என்ற வரலாறு தெரியாமல்தான் அதன் துணை ஆசிரியர் நியாஸ் இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றாரா?
சகோ. நியாஸ் அவர்களே!
NFGG யின் ஆதரவாளர்களான வார உரைகல்லின் தொடர்ச்சியான வாசகர்கள் சுமார் 400 பேரை என்னால் அடையாளம் காட்ட முடியும். அதே நேரம் சகோ. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து வார உரைகல்லின் கருத்துக்களால் கவரப்பட்டு NFGG யின் பக்கம் இணைந்து கொண்ட ஒரு நான்கு பேரை உங்களால் அடையாளப்படுத்த முடியுமா?
எனவே, வார உரைகல்லால் NFGG வளர்ந்ததை விட NFGG ஆதரவாளர்களால்தான் இன்று வரை வார உரைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மையினை நடு நிலமையுடன் சிந்திப்பவர்களால் நன்கு விளங்கி கொள்ள முடியும்.
NFGG உறுப்பினர்களுக்கு அரசியல் என்பது உள்ளு}ர் தொழில்களை பாதுகாத்துக் கொள்ளும் ஓர் அரணா?
சகோ. நியாஸ் அவர்களின் மற்றுமொரு அவதூறு என்னவென்றால், NFGG அமைப்பினர் அவர்களின் தொழில்களை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அரசியல் அங்கீகாரம் ஒன்றை பெற்றுக் கொள்ள துடிப்பதாகவும் மக்கள் நலன் அவர்களிடம் இல்லை என்று மன முரண்டாகவே தனது விஷக் கருத்தை பதிவிட்டிருந்தார்.
NFGG யின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலர் பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்டிருப்பது பலரும் ஏற்றுக் கொண்ட விடயம். உண்மையில் அந்த பொருளாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் அரசியலை நடாத்தியிருந்தால் அதற்கு மிகப் பொருத்தமான நேரம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிந்திய ஆட்சிக்காலம்தான் ஏனைய அரசியல்வாதிகளைப் போல் தாங்களும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வடம் பிடித்து வாலாட்டிக் கொண்டிருந்திருந்தால் பொருளாதாரத்தை பாதுகாப்பது மட்டுமல்ல பன்மடங்காகவும் ஆக்கியிருக்க முடியும்.
நியாஸ் அவர்கள் தனது கூற்றில் உண்மையாளராக இருந்தால் அவர் உண்மையில் தௌஹீதை ஆதரவு வைக்கும் ஒருவராக இருந்தால் தனது நெஞ்சில் கைவைத்து சொல்லவேண்டும் கடந்த ஆட்சியில் மாற்றம் கொண்டுவருவதற்கு மறைந்த சோபித தேரர், சந்திரிகா அம்மையார் போன்ற சிங்கள தலைவர்களுடன் முஸ்லிம்கள் சார்பில் முதன்முதலாக இணைந்து கொண்ட ஒரே இயக்கம் எதுவென்று. எதிரிகளாலும் மறுத்துச் சொல்ல முடியாத விசயம் அது 'நல்லாட்சிக்கான தேசிய முன்னணி' ஒன்றேயாகும்
அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன்னால் அவனுடைய அநியாயத்தை சுட்டிக் காட்டுவதுதான் உண்மையான ஜிஹாத் என்றால் NFGG செய்ததுதான் கடந்த ஆண்டின் மிகப் பெரிய ஜிஹாத். இந்த உண்மையினை நன்கு விளங்கியிருந்தும் வேண்டுமென்றே அவதூறு சொல்வதையிட்டு சகோ. நியாஸ் அவர்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.
இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். ஆட்சி மாற்றத்திற்கு அவ்வளவு உறுதியாகவிருந்தும் வெற்றி பெற்ற பின் பெரும்பாண்மை தலைமைகள் இந்த இயக்கத்தை வளரவிட்டால் ஆபத்து என்பதை தெளிவாக புரிந்து கொண்டு தற்போது தேசியப்பட்டியல் என்ற அரசியல் சூழ்ச்சியினால் மீண்டும் வெற்றிலைக்கு வலுவூட்டி கட்சி அரசியலுக்குள் மட்டக்களப்பு முஸ்லிம் அரசியலை மிக லாவகமாக தள்ளிவிட்டிருப்பதை உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள்? எப்போதான் உணர்ந்து கொள்ளப் போகின்றீர்களோ இறைவனுக்குத்தான் வெளிச்சம்.
அடுத்து நியாஸ் வைக்கும் அவதூறானது NFGG இயக்கத்திற்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்பதாகும். இந்த விடயத்தில் நியாஸிற்கு போதிய அறிவு இல்லாத போதும் சகோ. ஹிஸ்புல்லாஹ், முன்னால் நகர சபைத் தலைவர் சகோ. அஸ்பர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் போன்றவர்கள் NFGG யின் மக்கள் நல செயற்பாடுகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு ஒரு சில உதாரணங்களை இங்கு சுட்டிக்காட் முடியும். 'பசுமை நகரம் மற்றும் சக வாழ்வு' என்ற தொனிப்பொருள் NFGG யினுடையதாகும். இதனை தற்போது நகரசபை கையில் எடுத்திருக்கின்றது. 'குப்பை முகாமைத்துவம் குசினிக்குள் இருந்து தொடங்கப்பட வேண்டும்' என்பது NFGG யின் திட்டமாகும் இதனையும் நகர சபை தற்போது சரியாக முன்னெடுக்கின்றது. 'கல்வி அபிவிருத்திதான் ஒரு சமுகத்தின் ஆணிவேர்' என்ற அடிப்படையில் இலவச கொப்பி மற்றும் புத்தகங்களையும் கல்வி மையங்களையும் உருவாக்கியது NFGG தற்போது அதனை பல அரசியல்வாதிகளும் கையிலெடுத்திருப்பது மிக்க மகிழ்ச்சி.
இவ்வாறு சமுகத்தின் மீது அக்கறை கொண்டு பல திட்டங்களை NFGG முன்வைத்திருந்த போதும் அரசியல் அங்கீகாரம் என்ற ஒரேயொரு குறையினால் இவற்றை பூரணமாக செயல்படுத்த முடியாமல் இருக்கின்றது. ஆனால் NFGG யின் விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களை மாத்திரமல்ல பல அரசியல்வாதிகளையும் கண் திறக்க வைத்துள்ளது என்பதை அண்மைக்கால செயல்பாடுகள் நமக்கு உணர்த்தி நிற்கின்றது.
இறுதியாக, மனிதர்களைக் கொண்டு நடாத்தப்படும் எந்தவொரு இயக்கமாக இருந்தாலும் நூறு வீதம் யாராலும் சரிகாண முடியாது. நியாயமான விமர்சனங்களை யாரும் முன் வைக்கலாம். ஆனால் அதில் உண்மையான நியாயமும் ஒரு நளினமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அந்த வகையில் நியாஸ் வைத்த குற்றச்சாட்டுக்களைப் பார்க்கும் போது புகைப்படத்தைப் பிரசுரிக்கவில்லை என்பதும் பெயரைக் குறிப்பிடவில்லை என்பதும்தான்.
இவ்வாறான சில்லறைப் பிரச்சினைகளை பூதாகரமாக்காமல் சமுகத்திற்கு விழிப்புணர்வூட்ட வேண்டிய ஆக்க பூர்வமான செயல்பாடுகளில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
அதே நேரம் முகநூலில் NFGG இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகளை சரியாக புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கும் அரை வேக்காடுகளை விடுத்து நேர்மையாக சிந்திக்கும் ஊடகவியலாளர்கள் சரியான விடயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் திருகாணி பிடித்தவன் எல்லாம் மெக்கானிக் ஆக முடியாது என்பதுபோல் பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளன் என்றும் ஆகிவிட முடியாது.

