கட்சிகள் பலப்படும் தருணத்தில் மு.கா பலவீனப்படுகின்றதா?

Written By avathani Media Network on Thursday, May 5, 2016


(சாய்ந்தமருது  
எம்.எம்.எம். நூறுல்ஹக்)

உலக அரங்கில் பல நாடுகளின் மேதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அவற்றில் கூடுதலான தேசங்களில் இத்தினம் தேசிய தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் 1939இல் கொழும்பு விக்டோரியா மைதானத்தில் மேதினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன் இதன் தொடக்கம் ஆரம்பமாகியது. இதன் பின்னர் 1956 இல் பொது விடுமுறையாக இத்தினம் ஆக்கப்பட்டு 1965 இல் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. பொதுவாக 130ஆவது மே தினம் வழமைபோன்று இம்முறையும் மேதினக்கொண்டாட்டம் வெகு விமர்சையாக நமது நட்டிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

தொழிலாளர் தினமான இதனை அவர்களின் மேம்பாட்டுக்கு ஒரு உந்து சக்தியாக ஆக்கிக்கொள்ளும் வகையில் பேணுவதை விடவும் பிரதான அரசியல் கட்சிகள் தமது மக்கள் பலத்தினை நிரூபிப்பதிலும் ஏட்டிக்கு போட்டியான ஊர்வலங்களை காட்டுவதிலும் அதிக அக்கறையை எடுத்துக்கொண்டன.

மேதினத்தை அடுத்து வந்த தினங்களின் சில நகர்வுகள் நமது நாட்டின் அரசியல் நிலைப்பாட்டில் எதிர்பாராத சில மாற்றங்களை கொண்டு வரப்போகின்றது என் கின்ற ஒரு எதிர்பார்ப்பு சூழலை ஏற்படுத்தியிருந்தது. இதன் ஒரு கோணமாகவே முன்னாள் ஜனாதிபதியும் குருனாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு முற்றாக அகற்றப்பட்டமையும் வற் அதிகரிப்பை உறுதி செய்தமையையும் ஆளும் கட்சிகள் மீதான மக்களின் எதிர்வலைகள் திரும்பும் நிலையை எய்திக்கொள்ள வைத்திருக்கின்றது.

இதன் ஒரு உச்சக்கட்டமாக நேற்று கடந்த 03-05-2016 இல் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் முனாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு முற்றாக அகற்றப்பட்டமை தொடர்பில் பாரிய சர்ச்சை எழுப்பப்பட்டது மட்டுமன்றி நாடாளுமன்றத்தை மோதல் கலவரமாக உருவாக்கியிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறு இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அசட்டையாக விட்டுவிடுவது ஒரு நேர்மையான செயற்பாடாக பார்க்க முடியாது. அவருக்கு அச்சுறுத்தல் தமீழீழ விடுதலை புலிகளினால் மாத்திரம்தன் ஏற்படும் என்ற எடுகோளின் அடிப்படையில் பாதுகாப்பு குறைக்கப்பட்டால், அது சரியான பொறிமுறையாகாது.

எத்தகைய அதிருப்திகள் ஏற்பட்டாலும் இன்றைய தேசிய அரசாங்கத்தின் கட்டமைவு கவிழ்ந்து விடாத ஒரு இறுக்கமான பிணைப்பு மிகவும் வலிமைப்பட்டு காணப்படுகின்றது. இதனால் மக்களிடம் இந்த அரசாங்கம் பற்றி எழும்பும் எந்தவிதமான எதிர்ப்புக்களும் அதிருப்திகளும் எவ்விதமான அழுத்தங்களையும் அல்லது மாற்று நிலைப்பாடுகளையும் தோற்றுவித்துவிடாத பாங்குமே உறுதிப்படுகின்றது.

எது எப்படி இருந்தாலும் இன்றைய தேசிய அரசாங்கத்தில் முக்கிய பங்காளி கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றுக்கு இடையில் தத்தமது கட்சியின் ஆளுமைத்தடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என் கின்ற மேலாண்மை எண்ணமும் தனித்தனியான அரசாங்கம் அமைத்துக்கொள்ளும் தகுதியை பெற வேண்டும் என் கின்ற கட்சிப்போட்டி, அரசியல் தாபம் மிகுந்த பிரவாக பெருக்கெடுக்க தொடங்கி இருப்பதையும் இம்முறையே மேதினக் கொண்டாட்ட நிகழ்வுகளில் இருந்தும் அதன் பின்னரான நிகழ்ச்சி நிரல்களில் இருந்தும் வெளிப்படையாக தோன்றுவதை அவதானிக்க கூடியதாகவும் உள்ளது.

நமது நாட்டு மக்களிடம் காணப்பட்ட இனவாத அச்ச நிலையையும் வாழ்க்கை சுமைப்போக்குகளையும் களைந்தெறியும் முனைப்போடு அமைக்கப்பட்ட இன்றைய நல்லாட்சி அரசாங்கம் அதன் நோக்கு இலக்குகளை கட்டுடைப்பு செய்து மீண்டும் மக்களிடம் அச்ச நிலைகளையும் பொருளாதார சுமைகளையும் கூட்டும் மாதிரிகளுக்குள் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக திரும்பி வருவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கும் சந்தர்பத்திற்கு இன்றைய நிலைமை மாறிக்கொண்டிருப்பது மக்கள் நலன் சார்ந்த இணக்க மேம்பாட்டுக்குரிய அரசாங்கத்தின் கூறுகளாக இருக்கக் கூடாத பக்கங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் அதிருப்திகள் எம்மை எதுவும் செய்திடாது என் கின்ற ஒரு குறுட்டு நம்பிக்கையின் வழியில் இன்றைய அரசாங்கத்தின் தலைமைகள் நடக்க தொடங்குவது நாளுக்கு நாள் விரிவடைவதன் ஊடாக சில பிணக்குகள் புதிது புதிதாக தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புக்களையே இது கூட்டும். இது ஒரு ஆரோக்கியமான விளைவுகளை நம் மத்தியில் பதித்து விட எந்த வழியையும் கொண்டில்லை என்பதுதான் உண்மையாகும்.

நமது தேசத்தின் அரசியல் என்பது நமது பார்வைக்கு அப்பாலாண ஒன்றல்ல. அவைதான் நமது செல் நெறியையும் தீர்மானிக்கின்றது. இதன் அடிப்படையில் இன்றைய அரசாங்கத்தின் பக்கம் நமது சமூகத்தள அரசியல் கட்சிகள் சார்ந்து நிற்கின்றன. இவையின் அனுகூலம் எவ்வறான பெறுபேறுகளை நமக்கு அறுவடை செய்து தரும் என் கின்ற கேள்வியில்தான் நமக்கான வெற்றிப்பாதை திறக்கப்படும்.

இன்றைய சூழலில் பெரும் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன இணைந்து தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்றினை உருவாக்கிக்கொண்டதாக பேசப்பட்டாலும் அதன் இலக்கு நோக்கிய முன்னகர்ச்சிகளை இவ் அரசாங்கம் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை என்ற பதிவை மிக இலகுவாக பதித்து வருகின்ற கோணம்தான் வலுப்பெற்றும் வருகின்றது.

இத்தகைய சூழல்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை, ஐக்கிய தேசிய கட்சியுடம் ஒப்பிட்டு நோக்கினால் பலம் குன்றியதாகவே காணப்படுகின்றது. மாற்றுக்கட்சிகளின் கூட்டிணைவுதான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சற்று வலிமை பொருந்தியதாகவும் பெரும் கட்சியாகவும் காண்பித்துக் கொண்டிருக்கின்றது. அதே நேரம் ஐக்கிய தேசிய கட்சியின் பலம் என்பது அக் கட்சிக்கு மட்டும் உரித்தான தனிச்சக்தியானதாகும்.

என்றாலும் நமது மக்களாகிய முஸ்லிம்களும், தமிழர்களும் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பதிலும் அதன் அனுசரணையில் தங்களை கட்டுண்டு செய்வதிலும் பெரும்பாலனாவர்கள் தமது ஆதரவுத்தளத்தை பெருக்கியிருப்பது இன்னுமொரு பலமாக அக்கட்சிக்கு அமைந்துவிடுகின்றது. இந் நிலைதான் ஏனைய சிங்கள கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியையும் விட வலிமை குறைந்த ஆளுமை உடையவனாக வெளிப்படையில் தெரிவதன் தாற்பரியமுமாகும். முஸ்லிம் சமூகத்தளத்தில் தனித்துவ கட்சிகளாக அடையாளப்படுத்தி வருகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் முன்னகர்வுகளும் மேற்குறித்த இரு பெரும் கட்சிகளின் சார்பு நிலையை கொண்டு இயங்கும் தளத்தை வலுப்படுத்தி வருகின்றன. 



இந்த அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் அக்கட்சியின் தலைமை பொறுப்பை பொறுப்பேற்ற கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து பெரும்பாலும் தமது ஆதரவுத்தளத்தை ஐக்கிய தேசிய கட்சியுடன் சார்ந்ததாக கட்டியெழுப்புவதில் ஒரு மும்முரத்தன்மையை மூர்க்கத்தனமாக முன்னெடுத்து வருவதை சாதரண அவதானிப்பில் இருந்து கூட அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது

அதுமாத்திரமன்றி ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவ காலத்தினுள் பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பனவற்றின் அரசாங்க காலத்தில் முண்டு கொடுப்பவர்களாக இருந்தாலும் அவை தனது இஷ்டத்தின் பிரகாரம் அல்லது முழு மனதோடு சங்கமித்த ஒன்றல்ல என்பதை மிகத்துலம்பரமாக பல சந்தர்பங்களில் வெளிப்படுத்தியும் உள்ளார். இது அவர் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கமே தன்னை சாய்ந்து கொள்வதை தனக்கு வசதியான ஒரு பக்கமாக உறுதியுடன் இருந்து வந்திருப்பதையும் தெரிவிப்பதாகக் கொள்ளலாம்.

இதனை வலிமைப்படுத்தும் முகமாக பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பனவற்றின் அரசாங்கத்தில்தான் சேர்ந்து கொள்வதற்கு தனது கட்சியின் வேறு சிலரின் பிழையான காய் நகர்த்தல்களினால் கட்சி உடைவு பெற்றுவிடும் அபாயத்தை நோக்கி நகர்ந்து சென்றதினால், அதனைக்காப்பாற்றும் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே இவ் அரசாங்கங்களுக்காக தமது முண்டுக்கொடுத்தலை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் பல இடங்களில் இதனை வலியுறுத்தியும் வருகின்றார். இது கூட ஐக்கிய தேசிய கட்சியின் மீது அவருக்கு இருக்கும் தீராத பற்றுதலும் விலகாத காதலும் உண்டென்பதை திட்டவட்டமாக அறிவிப்பதாகவும் இதனைப்பார்க்க முடியும்.

நமது முஸ்லிம் அரசியல் களத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு அடுத்ததாக இன்று உரத்துப்பேசப்படுகின்ற மற்றொரு கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஐக்க்கிய தேசிய கட்சியின் பக்கம் சார்பு நிலை கொண்டு தங்களை நிலைப்படுத்தும் ஒரு போக்கில் மிக வலிமையாக தங்களை ஈடுபடுத்தி வருகின்ற ஒரு நிலையும் உறுதியாக தெரிய வருகின்றது. இவைகள் யாவும் முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தனி அரசாங்கத்தை எதிர்காலத்தில் உருவாக்குவதற்கு பாறிய பங்களிப்புக்களை நல்கிவிடும் கோணத்தை இன்னும் வலிமைப்படுத்தி காட்டுகின்றது.

தேசத்தின் பெரும் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவுத்தளம் இன்று மிகவும் நலிவடைந்து காணப்படுகின்றது. இதனை தம்பக்கம் கூட்டிக்கொள்வதற்கு அக்கட்சியின் இன்றைய தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரி பால சிறிசேன சில திட்டங்களை கடந்த மேதினத்தில் இருந்து கட்டமைத்துக்கொள்வதற்கு அதி தீவிரத்தன்மையை வெளிப்படுத்துவதற்கான ஒரு முனைப்பை தன் பக்கம் இருந்து வெளிப்படுத்த தொடங்கி இருக்கின்றார். 

இதன் ஓர் அங்கமாகத்தான் முஸ்லிம்களின் அரசியல் தளத்தில் ஓரளவு பேசப்படுகின்ற தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாவை தன்பக்கம் இழுத்திருக்கின்றார். இதன் ஒரு முன்னோடி நடவடிக்கையாகவே தேசியப்பட்டியலின் ஊடக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் தோற்றிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகா நியமித்தது மட்டுமன்றி ஒரு இராஜாங்க அமைச்சரகாவும் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் ஆதரவுத்தளத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பக்கம் வேரூன்ர செய்வதற்காக யாழ் மாவட்டத்தை சேர்ந்த அங்கஜன் என்பவரை தேசியப்பட்டியலின் ஊடாக தன் பக்கம் முன்னர் அரவனைத்திருந்த ஜனாதிபதி மேலும் தமிழ் மக்களின் ஆதரவை அதிகரிக்க செய்யும் நோக்கில் முன்னாள் அமைச்சர் தொண்டமானையும் பிரபா கனேஷன் போன்றோர்களை இப்போது தம்பக்கம் இழுப்பதற்கான சமிஞ்சைகளையும் காட்டிவருகின்றார். இவைகள் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதர்வுத்தளம் தம்பக்கம் திரும்புவதன் ஊடாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஐக்கிய தேசிய கட்சியை விட தமது கட்சி பலமடைய முடியும் என்ற அடைவு மட்டத்தை நோக்கிய நகர்வென்பதில் எவ்விதமான ஐயங்களும் இல்லை.

இதன் இன்னொரு கதையாடலாகத்தான் யாழ் மாவட்டத்தை சேர்ந்த டக்லஸ் தேவானந்தா, மலையகத்தை சார்ந்த தொண்டமான் போன்றொருக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்படலாம் என் கின்ற கருத்து வெளிப்படுவதன் பின்னணியாககூட எம்மைப்பார்க்க வைக்கின்றது. தென் மாகணத்தை சார்ந்த மஹிந்த அணி ஒருவரை அண்மையில் பிரதி அமைச்சராக தன் பக்கம் இழுத்துக்கொண்டதன் பின்னர்தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இம்முறைய மேதினத்தை காலி மா நகரில் ஜனாதிபதி நடாத்தி முடித்திருப்பதும் மிகுந்த அவதானத்துக்குரிய ஒன்றாகும். 

ஜனாதிபதியை பொறுத்தவரை அமைச்சுப்பதவிகளை வழங்கி தமது கட்சியின் பலத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. இந்த சாதகமும் மற்றும் அதிகாரத்தை நோக்க்கி சாய்ந்து கொள்கின்ற இயல்பு பொதுவாக நமது மக்கள் பிரதி நிதிகளிடமும் காணப்படுவதினால் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவின் பொறிமுறை அவருக்கு கைகொடுக்கவும் வாய்ப்புள்ளதை காட்டுகின்றது

நமது நாட்டின் இன்றைய அரசியல் களம் தத்தமது கட்சிகளை பலப்படுத்திக்கொள்வதில் எந்த எந்த வகையில் முயற்சிகளை மேற்கொள்வதின் ஊடாக சாத்தியப்படுத்த முடியுமோ அந்தந்த மாதிரியில் தங்களை உட்படுத்திக்கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் முஸ்லிம் அரசியல் களத்தில் பலம் பெறும் கட்சியாகவும் பெரும்பாலான மக்களினால் அகர்ஷிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகவும் தன்னை வளர்த்தெடுத்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மைக்காலமாக தமது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் மக்கள் ஆதரவினை கூட்டுவதிலும் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக கட்சியின் முக்கிய பதவி நிரலுக்குரிய பல உறுப்பினர்களை கட்சியிலிருந்து தூக்கி வீசும் பாங்கில் தலைமைத்துவம் நடந்து கொள்ள முற்படுவதை நாம் பார்க்க கூடியதாகவும் உள்ளது.

இத்தகைய நிலைப்பாடுகள் முஸ்லிம் சமூகம் நலன் சார்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு தமது தேவைகளை ஒருமித்தும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாய தருணத்தில் கட்சியில் களை பிடுங்குவதாக காண்பித்து மக்களின் அதிருப்தியை தம் பக்கமும் தம் கட்சியின் பக்கமும் இழுத்து வருவதற்கான ஒரு நடவடிக்கையின் பால் தன்னை உட்படுத்தி வருவது ஓர் ஆரோக்கியமான அரசியல் நகர்வாக அரசியல் விமர்சன ரீதியாக பார்க்க முடியவில்லை. 

ஏனெனில் கடந்த 03-05-2016 இல் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் அதிருப்தியாளர்களை உள்வாங்குவதில் ஒரு மழுப்பலான முனைப்பையே தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டியிருப்பதாகவே சில செய்திகள் கசியவும் வெளிவரவும் தொடங்கி உள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்குள் மாற்றுக்குழு , மாற்று அணி என்ற சொற்பதங்களை பிரயோகித்து நியாயங்களை கேட்போர்களை வெளியேற்றி விடுகின்ற முஸ்தீபுகளும் அதற்கு உரமிடுபவர்களாக மக்களை மாற்றிவிடுகின்ற எத்தனங்களையும் கனகச்சிதமாக தலைவர் ரவூப் ஹக்கீம் கையாள்வதில் மிக வல்லவராக தன்னை நிலைப்படுத்தியும் வருகின்றார். அதே நேரம் கட்சிக்கு வெளியே பிரிந்து சென்று நியாயங்கள் தேடக்கூடாது, கட்சிக்குள் இருந்து கொண்டே நியாயங்களை தேட வேண்டும் அதுதான் சரியான முறை என்றும் முழங்குவதை அவர் இன்னும் நிறுத்தவில்லை.

இதற்கு அவர் கொண்டிருக்கும் வரையறையோ, அர்த்தமோ நமக்கு புரிவதில்லை. ஆனால் பொதுவான கோட்பாட்டின் அடிப்படையில் நாம் விளங்கி வைத்திருக்கின்ற ஜனநாயக பண்பின் கூறுகளில் சுதந்திரமாக நமது சுயம் நோக்கி கேள்விகளை தொடுப்பது அனுமதிக்கப்படுகின்ற ஒரு பகுதியாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது இங்கு பேணப்படுகின்றதா என்றொரு கேள்வியை எழுப்பினால் இல்லையென்று சட்டென்று பதில் கிடைத்து விடும்.

நியாயங்களை கேட்போர்களை கட்சிக்கு எதிரான சதியளர்கள் என்ற பிரகடனத்தை உட்கிடையாக அவர்கள் மீது சாற்றுவதற்கு தலைமைத்துவத்தின் ஏவலாளிகள் பலரை சூசமாக பயன்படுத்தி ஊடக அறிக்கைகள் மூலம் நாறடிக்க செய்கின்ற ஒரு நாகரிகமற்ற கலாசாரத்தை தனக்குள் வளர்த்தும் வருகின்றார். உண்மையில் அண்மைய அரசியல் உயர் பீட கூட்டத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செயலாளர் அதிகாரக்குறைப்பு விவகாரம் மற்றும் இரண்டு உயர்பீட உறுப்பினர்களான மௌலவிகள் கலீல், இல்யாஸ் ஆகியோர் பற்றிய இடை நிறுத்தம் பற்றி நேர்மையான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று தீர்வு ஒன்று காணப்படும் என்று நம்பப்பட்ட நம்பிக்கை தூள் தூளாக நொறுக்கப்பட்டிருக்கின்றது. 

செயலாளர் விவகாரத்தை ஆராய்ந்து ஒறு முடிவுக்கு கொண்டுவர சட்டத்தரணி பாயிஸ், மாகாணசபை உறுப்பினர் ஜவாத் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீன் ஆகியோர்களை கொண்ட ஒரு குழுவை நியமித்ததோடு இந்த சாமாச்சாரத்தை கலந்துரையாடும் சூழலை தவிர்த்து இப் பிரச்சனையை பின் தள்ளிய ஒரு சுவாரஷ்யத்தை தலைவர் செய்திருக்கின்றார். 

இவ்வாறான செயற்பாடுகளை முன்னிறுத்துவதன் மூலம் மாற்று கருத்தாளர்கள் அதாவது நியாயங்களை கோருபவர்கள், சொல்பவர்கள் என்பவர்களை கட்சியின் எதிரணி போன்று தொடர்ந்தும் வைத்திருப்பதில் தலைமைத்துவம் தன்னை திடப்படுத்தி கொள்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் இன்றைய நமது தேசத்தின் அரசியல் சூழலில் வரவேற்கத்தக்க ஒரு போக்காக இல்லையென்பதை நடு நிலையாக நோக்கும் அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுவது உண்மைக்கு ஒருபோதும் புறம்பாக மட்டாது. 



MMM.NoorulHagu 129/B Osmaan Road Sainthamaruthu - 05, 0772612094



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.