மின்சாரம் வழங்கப்படாத அனைவருக்கும் மூன்று மாத காலத்திற்குள் மின்சாரம் வழங்கப்படும் என பவர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 5.00 மணியாளவில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார விநியோக அமைப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த பவர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா விஜயத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரைக்கும் நாம் 120000 வீடுகளுக்கு இணைப்பை வழங்கி உள்ளோம். இன்றும் நாளையும் வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிற்கும் விஜயம் செய்து இலங்கைமின்சார சபையால் என்ன செய்யப்பட்டுள்ளது என்ன செய்ய வேண்டும் என்பதனை ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்த உள்ளேன்.
அத்தோடு இங்கு காற்றாலை மூலம் மின்சாரம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என ஆராய்வதும் இவ் விஜயத்தின் நோக்கம் என குறிப்பிட்டார்.
இதேவேளை வடக்கையும் தெற்குப் போல் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம். வடக்கு தெற்கு என்ற பேதமில்லாத நாட்டை கட்டி எழுப்புவதே எமது நோக்கம் எனவும் காசில்லாதவர்கள் மற்றும் மின்சார இணைப்பை செய்வதற்கு வசதி இல்லாதவர்கள் அனைவருக்கும் நாம் எமது மின்சார சபை ஊழியர்களை அனுப்பி மின்சார இணைப்பை செய்து கொடுப்போம்.
அவர்கள் பின்பு பணம் கட்டக் கூடியவாறு இது எமது புதிய திட்டம் எனவும் வீதியில் உள்ள மின்சாரக் கம்பத்திலிருந்து உங்கள் வீடுவரை மின் வயரை கொண்டு சென்று வீட்டிற்கு மின் இணைப்பு வேலைகள் அனைத்தையும் செய்து மின்சாரத்தினை வழங்குவோம்.
உங்களுக்கு ஆறு வருடங்கள் அதாவது 72 மாதங்களை வழங்குகிறோம். மாதம் 680 ரூபாய் செலுத்த வேண்டும். இது ஒருமிகக் குறைந்த தொகை. இந்த அதிஸ்டத்தை தவறவிடாமல் மின்சார சபைக்கு சென்று பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
வடக்கு தெற்கு என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் மின்சாரம் வழங்குவதே எமது இலக்கு எனவும் தெரிவித்தார்.

