மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வதி விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது அலுவலக வாகனத்திற்கு சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தீ வைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவிக்கையில்,
சனிக்கிழமை அதிகாலை சுமார் 12.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்த போது இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியதாகவும் வாகனத்தின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த மேலதிக டயர் எரிந்து கொண்டிருந்தபோது தாங்கள் அணைத்ததாகவும் கூறியிருக்கின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் குறித்த இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

