மாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் இல்ல விளையாட்டுப் போட்டி

Written By avathani Media Network on Thursday, April 7, 2016


(ஆர்.எஸ். மஹி)

மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கு இடையிலான இல்ல விளையாட்டுப் போட்டி இரண்டாவது தடவையாகவும் எதிர்வரும் ஏப்ரல் 13,14ஆம் திகதிகளில் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

கல்லூரியின் 95ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு மேற்படி பழைய மாணவர் இல்ல விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த தசாப்தத்தில் சுமார் 5000 பழைய மாணவர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட மாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கமானது ஒரு அங்கத்துவ அமைப்பாகும். மொத்தமாக சுமார் 18000 சாத்திய அங்கத்துவத்தைக் கொண்ட அமைப்பாகவும் இது காணப்படுகின்றது. அத்துடன், மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர்கள் உள்நாட்டிலும் உலகின் அனேக நாடுகளிலும் பல்வேறு துறைகளிலும் சேவைகளிலும் தலைசிறந்து விளங்குகின்றார்கள்.

கடந்த காலங்களில் மாவனல்லை ஸாஹிரா பழைய மாணவர் சங்கத்தின் நிறைவேற்றுக் கமிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் 2013 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பழைய மாணவர் விளையாட்டுப் போட்டி மிகவும் கவர்ச்சிகரமானதும் கோளாகலமானதுமான நிகழ்ச்சியாகும். 2013 ஆம் ஆண்டின் விளையாட்டுப் போட்டி சுமார் 400 பழைய மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர். ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர் இல்ல விளையாட்டுப் போட்டியினது அமைப்பை ஒத்ததாகவே இந்தப் போட்டியும் காணப்படுகின்றது.

மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையின் கடந்த கால வரலாற்றினை நோக்கும் போது, மூன்று தலைமுறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் மாணவர்கள் மூன்று வெவ்வேறு வகையான இல்லங்களாக பிரிக்கப்பட்டிருந்தனர்: 1980 இற்கு முன்னராக அக்பர், இக்பால், ஜின்னா என்ற இல்லங்கள், 1983 1990 வரை மக்கா, மதினா, தாயிப் என்ற இல்லங்கள், 1991 முதல் அல்அஸ்ஹர், அல்ஸஹ்ரா, கோடோவா, நிஸாமியா என்ற இல்லங்கள். 

இந்த பல்வேறு காலப்பகுதியைச் சேர்ந்த வெவ்வேறு இல்லப் பெயர்களைக் கொண்ட மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர்களை இம்முறை இல்ல விளையாட்டுப் போட்டியின் போது 04 இல்லங்களுக்குள் உள்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அல்அஸ்ஹர் (இக்பால் மற்றும் மதினா இல்லங்களுடன்), அல்ஸஹ்ரா (ஜின்னா மற்றும் தாயிப் இல்லங்களுடன்), கோடோவா (அக்பர் மற்றும் மக்கா இல்லங்களுடன்) மற்றும் நிஸாமியா (ஹிங்குளோயா பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன்) என்ற நான்கு இல்லங்களாகவே ஸாஹிராவின் பழைய மாணவர்கள் போட்டி போட உள்ளார்கள். 

2016 பழைய மாணவர் இல்ல விளையாட்டுப் போட்டியானது ஏப்ரல் 13 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு 40 வயதுக்கு கீழ் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான வீதியோட்டப் போட்டியுடன் ஆரம்பமாக இருக்கின்றது. கிரிகெட் (40 வயதுக்கு கீழ் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கானது), றக்பி, கரப்பந்தாட்டம் மற்றும் மின்னொளியிலான கூடைப்பந்தாட்டம் போன்றன முதலாவது நாளினை அலங்கரிக்கின்றன. பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் விறுவிறுப்பான மெய்வல்லுனர் போட்டிகள் இரண்டாவது நாள் காலையில் நடைபெற இருப்பதுடன் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் எல்லேயும் நடைபெறும். மாலையில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒரு கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டி மற்றும் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெறவுள்ளது. 

இந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் மாலைநேர விருது வழங்கல் நிகழ்ச்சியின் பிரதான அதிதிகளாக ஸாஹிரா தேசிய பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற முன்னால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்ற இருப்பதுடன் வெற்றியாளர்களுக்கான விருதுகளை வழங்கவும் இருக்கின்றார்கள்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.