(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நிந்தவூர் பிரதான வீதியில் (அக்கரைப்பற்று- கல்முனை பிரதான வீதி) இன்று இரண்டு மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
நிந்தவூர் பொது நூலகத்திற்கு முன்பாக பிரதான வீதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான அப்துர் றகுமான் றமீஸ் ( வயது- 27) என்பவர் ஸ்தலத்திலேயே மரணமானார்.
இவரது சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நசீல் விபத்து இடம்பெற்ற இடம், வைத்தியசாலையிலுள்ள சடலம் என்பவற்றைப் பார்வையிட்டதோடு சம்மந்தப்பட்டவர்களோடு விசாரணைகளையும் மேற்கொண்டார். இறுதியில் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டதோடு, இவருடன் மோதிவிட்டுத் தப்பியோடியவரையும் கைது செய்யுமாறு சம்மாந்துறைப் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரிக்கு முன்பாக இடம் பெற்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் விபத்தில் நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரும், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மோதிக் கொண்டனர்.
இதில் பொலிஸ் உத்தியோகத்தர் சிறு காயங்களுடன் தப்பித்தார். சமூர்த்தி உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் சிறிது சேதத்திற்குள்ளானது.
