(மதியன்பன்)
கடத்தல் காரர்களே..!
கொஞ்சம் கருணை காட்டுங்கள்
கட்டி வைத்திருக்கும்
காற்றையும், மழையையும்
மறு அறிவித்தல் வரை
மன்னித்து அவிழ்த்து விடுங்கள்
சுறுண்டு போன
சுங்கான் கருவாடாய்
மாறிப் போனது மனித உடல்கள் மட்டுமல்ல
மரங்களும் கூடத்தான்.
ஓடைகளும், நதிகளும்
ஓடமுடியாமல்
காலுடைந்து கவலைக்கிடமாய் இருக்கின்றன.
புற்பூண்டெல்லாம்
அப்பளம் பொரிக்கும் அகோர வெயிலில்
கருகி காணாமல் போனதாக
கவலை தெரிவித்தது காகம் ஒன்று.
மரத்தின் அடியில்
மண்டியிட்டவர்கள்
இப்போது
இலைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களு}ரில்
வற்றிய குளமொன்றை
இப்போது
விiயாட்டு மைதானமாய்
விளம்பரப் படுத்தியிருக்கிறார்கள்
குளிரூட்டிய அறைகளில்
கூடியிருந்து
தீட்டிய திட்டங்களெல்லாம்
வெளியில் வந்ததும் வீணாகிப் போயின.
முறைப்பாடுகளை
முழுமையாக விசாரித்த வகையில்
கதிரவனாரை
கண்ட இடத்தில் கைது செய்யும் படி
கடல் தலைவன்
அதிரடியாய் அறிவித்திருக்கிறான்.
27.04.2016

