(சாய்ந்தமருது-எம்.எஸ்.எம்.சாஹிர்)
மருதானை ஜம்மியத்துஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் கடந்த(01.05.2016) வெள்ளியன்று இடம் பெற்ற நவமணி பரிசுமழை பரிசளிப்பு நிகழ்வில் கௌரவ அதிதிகள், பிரமுகர்கள் ஆற்றிய உரை.......
ஜம்மியத்துஷ் ஷபாப் அமைப்பு
இன, மத, பேதமின்றி பணிபுரிகிறது
அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.தாஸிம்
ஜம்மியத்துஷ் ஷபாப் அமைப்பு இன, மத, பேதமின்றி தமது சேவைகளை சகல சமூகங்களுக்கு வழங்கி வருகின்றது என ஜம்மியத்துஷ் ஷபாப் அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம். தாஸிம் கூறினார்.
நவமணி பரிசுமழை பரிசளிப்பு விழா கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
நவமணிப் பத்திரிகையும் ஜம்மியத்துஷ் ஷபாப் அமைப்பும் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய ரமழான் பரிசு மழை மூன்றாவது முறையாக மிகவும் வெற்றிகரமாக இந்த மண்டபத்திலே நடை பெறுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
கடந்த இரண்டு வருடங்களாக ரமழான் பரிசு மழை போட்டியில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு மௌலானா ட்ரவல்ஸ் உம்ரா செய்வதற்கான வாய்ப்பை முதல் பரிசாக அளித்தது. அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். எதிர்காலத்தில் முதல் மூன்று பரிசினைப் பெறுகின்ற போட்டியாளர்களுக்கும் அதாவது 1ஆம்2ஆம்3ஆம் பரிசினைப் பெறுகின்றவர்களுக்கும் உம்ரா செய்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜம்மியத்துஷ் ஷபாப் அமைப்பும் நவமணிப் பத்திரிகையும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
எதிர்வரும் காலத்திலும் இது போன்று இன்னும் சிறப்பான முறையில் போட்டிகளை நடாத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டு வருகின்றோம். ஜம்மியத்துஷ் ஷபாப் அமைப்பு இந்த நாட்டில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பல சேவைகளைச் செய்து வருகின்றது. குறிப்பாக இந்த நாட்டில் கண்களில் ஏற்படுகின்ற கண்ணில் வெள்ளை படர்தல் (கட்ரட்) சத்திர சிகிச்சை இருபதாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ஷபாப் மூலமாகச் செய்திருக்கின்றோம். அதன் 18ஆவது முகாம் இம்மாதம் 20ஆம் திகதி புத்தளம் குவைத் வைத்தியசாலையில் நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல், அதன் பின்னர் காத்தான்குடி வைத்தியசாலையில் நடைபெற உள்ளது. இலங்கையின் தனித்துவமான நிறுவனம் இச்சேவையைச் செய்வதனை முன்னிட்டு சுகாதார அமைச்சு ஷபாப் அமைப்பை கௌரவிக்க இருக்கின்றது. இவ்விடயத்தை ஜனாதிபதிக்கும் எத்தி வைக்க இருக்கின்றோம். இந்த நாட்டில் எந்த நிறுவனமும் மேற்கொள்ளாத விடயத்தை ஜம்மியத்துல் ஷபாப் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. ஆண்டுக்கு 1500 பேர்களுக்கு கண்ணில் வெள்ளை படுதல் (கட்ரட்) க்கான சத்திர சிகிச்சை இடம்பெற்று வருகின்றது. இந்த மாதம் சவூதி அரேபிய தமாமில் அமைந்திருக்கின்ற அல் - பஸ்ஸர் நிறுவனத்துடன் இணைந்து பாகிஸ்தான் டாக்டர்கள் 20 பேர் வருகை தரவுள்ளார்கள். இந்த வருடம் 2500 பேருக்கு நாங்கள் சத்திர சிகிச்சை செய்ய இருக்கின்றோம். இது எமது சமூகத்துக்குக் கிடைத்த ஒரு கிருபை என நாங்கள் நினைக்கின்றோம். இன்னும் இந்த நாட்டில் 58 பௌத்த விகாரைகளில் நாம் மருத்துவ முகாம்களை நடாத்தி இருக்கின்றோம். இதன் தொடராகத்தான் இந்த போட்டி நிகழ்வுகள் இடம் பெறுகின்றது - என்றார்.
சமூகத்தினை அறிவூட்டுவதில்
நவமணியின் பங்கு அளப்பரியது
பணிப்பாளர் சமீல்
சமூகத்தின் குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவினை வளர்ப்பதில் நவமணிப் பத்திரிகையும் அஷ் - ஷபாப் அமைப்பும் இணைந்து ஆற்றும் பணி மகத்தானது என முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் தெரிவித்தார்.
அஷ் - ஷபாப் நிறுவனம் நவமணி பத்திரிகையுடன் இணைந்து நடாத்திய ரமழான் பரிசுமழைப்போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டுரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மருதானை அஷ் - ஷபாப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த விழாவில், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
அல் - குர்ஆனைக் கற்பதற்கு உதவி செய்வதும் அதனை கற்பதற்குத் தூண்டுவதும் மிகப் பெரும் பணியாகும். எமது முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில், அல் - குர்ஆனை மனனமிடுகின்றவர்கள் அதிகமாகக் காணப்படுகின்ற இந்த நிலையிலே, அந்த அல் - குர்ஆனை விளங்குவதற்கும் அதனுடைய பொருள் அறிந்து ஓதுவதற்கும் உறுதுணையாக இருப்பது சிறந்த பணியாகும். அந்தப்பணியை ஷபாப் நிறுவனமும் நவமணிப் பத்திரிகையும் இணைந்து கடந்த சில வருடங்களாகச் செய்து வருவது ஒரு பாராட்டுக்குரிய விடயம்.
இந்தப் பணியினூடாக இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள எமது முஸ்லிம்கள், போட்டியிலே வெற்றி பெறுவதற்காக என்றிருந்தாலும் கூட, கேள்விக்குரிய விடயங்களைத் தேடுவதற்கு முயற்சி செய்கின்றார்கள். அல் - குர்ஆனிலே அந்த விடயங்களைப் பற்றி தேடிப் பார்ப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இது அவர்களை அத்தோடு மட்டும் நிறுத்திவிடமாட்டாது. அல் - குர்ஆனுடைய பொருளை நாங்கள் நன்றாக விளங்க வேண்டும் என்று முயற்சிப்பவர்களாக இருந்தால், நாங்கள் ஒரு போதும் ஒரு சில விடயங்களை விளங்கிவிட்டு நிறுத்துவதற்கு முயற்சிக்க மாட்டோம். ஏனெனில் அல் - குர்ஆன் கூறுகின்ற கருத்துக்கள் ஒவ்வொரு மனிதனையும் கவரக் கூடியவைகள். இஸ்லாமிய வரலாற்றிலே அல் - குர்ஆன் வசனங்களை செவிமடுத்து எமது மார்க்கத்துக்கு வந்த பலரை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். பார்த்திருக்கின்றோம்.
அல் - குர்ஆன் வசனங்கள் கூறுகின்ற கருத்துக்களை சிந்திப்பதினூடாக, அந்தக் கருத்துக்களை விளங்குவதினூடாக கண்ணீர் வடித்து அல்லாஹ்வை ஞாபகமூட்டியவர்களைப் பற்றி நாங்கள் வரலாறுகளிலே படிக்கின்றோம். அந்த வகையிலே அல் -குர்ஆன் வசனங்களை விளங்குவதென்பது உண்மையிலே எங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விடயம். எனவே அந்தப் பணியை இந்த இரண்டு நிறுவனமும் இணைந்து செய்வது பாராட்டக் கூடிய விடயம். அவர்களுடைய இந்தப் பணி மேலும் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்தப் பணியினூடாக இன்னும் பல முஸ்லிம் சகோதரர்கள் பயன் பெற வேண்டும். முஸ்லிம் சகோதரர்கள் மாத்திரமல்லாமல் ஏனைய சமூகத்தவர்கள் கூட அதனூடாக தெளிவு பெற்று பயன் பெற வேண்டும். என்று கூறினார்.
குர்ஆனை உயிர்ப்பிக்கும்
செயற்பாடுகளுக்கு சவூதி தொடர்ந்து உதவும்
தூதுவரக அதிகாரி உமர் அல் - அம்ரி
குர்ஆனை உயிர்ப்பிக்கும் செயற்பாடுகளுக்கு சவூதி அரேபியா உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு உதவ வருகிறது. இந்த வகையில் இந்த நாட்டிலும் சவூதி அரேபியத் தூதுவராலயத்தினூடாக பல உதவிகளை சவூதி அரேபியா செய்து வருகின்றது. எதிர் காலத்திலும் இந்த உதவிகளை மேலும் மேலும் வழங்குவோம் என கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதுவராலய உயர் அதிகாரி உஸ்தாத் உமர் அல் - அம்ரி கூறினார்.
நவமணி பரிசுமழைப் பரிசளிப்பு விழாவில் மேலும் பேசிய அவர் கூறியதாவது,
ஜம்மியத்துஷ் ஷபாப் முஸ்லிம் செய்லான் என்ற இலங்கை முஸ்லிம் வாலிபர் அமைப்புக்கும் எனது நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகளைச் செய்தவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். குறிப்பாக இந்த அமைப்பினுடைய செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக, குர்ஆனோடு, அதனை மனனம் செய்வதோடு, அதனைப் பாதுகாப்பதற்காக எடுக்கின்ற நடவடிக்கைகளை இட்டு நான் சந்தோஷப்படுகின்றேன். உலகின் சகல நாடுகளிலும் முஸ்லிம் உம்மத்துக்காக சவூதி அரேபியா தனது உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந்த நாட்டிலும்
சவூதி அரேபியத் தூதரகத்தின் மூலமாக பல்வேறு உதவிகளை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு வழங்குகின்றது. அல் - குர்ஆனோடு அந்த குர்ஆனுடைய ஹிப்ழ் மற்றும் அதனோடு தொடர்பான பல்வேறு நிகழ்வுகளுக்காக வேண்டி இன்னும் பல உதவிகளைச் சவூதி அரசு மேற்கொண்டு வருகின்றது.
எதிர் காலத்திலும் இவ்வாறான உதவிகளை நாம் பெற்றுத் தருவதற்கு முயற்சிகளைச் செய்து வருகின்றோம். என்றார்.
சமூகப் பிரச்சினைகளைக் கூறும்
ஊடகங்களுக்கு உதவுவவது சமூகத்தின் கடமை
நவமணி ஆசிரியர் என்.எம்.அமீன்
சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் சமூகத்தின் அபிலாசைகளைச் சொல்லும் பத்திரிகைகளுக்கு உதவுவது சமூகத்தின் சகல மட்டத்தினரதும் கடமையாகும் என நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் கூறினார்.
நவமணி பரிசுமழை பரிசளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
நவமணி இந்த நாட்டினுடைய முஸ்லிம் சமூகத்தால் நடாத்தப்படுகின்ற ஒரேயொரு தேசியப் பத்திரிகை. 20ஆவது ஆண்டு நிறைவை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையில், இந்தப் போட்டியின் மூன்றாவது ஆண்டு நிறைவின் பரிசளிப்பு விழாவுக்கு வருகை தந்துள்ளீர்கள். இந்த நாட்டிலே 1882 ஆம் ஆண்டு மர்ஹும் சித்திலெப்பை முஸ்லிம்களுக்காக ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அன்று தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தை விழிக்கச் செய்வதற்காகவும், கல்வியைப் பெறச் செய்வதற்காகவும் பாடுபட்டு கருத்துக்களை உருவாக்கி உழைத்தவர். அன்றிலிருந்து இந்த வருடம் மே மாதம் வரை முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களுடைய கட்டுப்பாட்டில் தினசரி இல்லாத நிலையில் நாங்கள் நவமணி மூலம் இந்தப் பணியை இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக, இந்த நாட்டின் தேசிய ஐக்கியத்தை வளர்ப்பதற்காக நாளாந்த பத்திரிகையாக வெளிக் கொண்டு வந்தோம். இன்று நவமணியிலே நடாத்தப்பட்ட போட்டியிலே வெற்றி பெற்ற நீங்கள் பரிசில்களைப் பெறுவதற்காக சமூகமளித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் , நவ மணிப் பத்திரிகையைப் பற்றி நான் ஒரு சில வார்த்கைளைக் கூற விரும்புகின்றேன்.
இந்த நாட்டிலே, இந்த சமூகத்தினுடைய குரலாக, பல சிரமங்களுக்கு மத்தியில், சகோதர் றிஸ்வி தலைமையில் நாங்கள், இந்த முஸ்லிம் சமூகத்துடைய தேவையை உலகுக்கு எடுத்துச் சொல்வதற்காக நவமணியை பல சிரமங்களை எதிர் கொண்டு நாளிதழாகக் கொண்டு வந்திருக்கின்றோம். இதனை வளர்த்து கைதூக்கி விடுவது இந்த சமூகத்துடைய கடமை. குறிப்பாக வர்த்தக சமூகத்துடைய கடமை. ஏனெனில், நாங்கள் 1200 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றோம். எங்களுடைய மூதாதையர்கள், இந்த நாட்டிலே வாழுகின்ற சிங்கள மக்களோடும், தமிழ் மக்களோடும் ஒற்றுமையாகவும், கௌரவமாகவும் வாழ்ந்து வந்தார்கள். அண்மைக்காலமாக அந்த சமூகத்துடைய இருப்புக்கு சவால் மேற்கொள்ளப்பட்ட போது, இந்த சமூகம் எங்கே செல்வது என்ற ஒரு சிக்கல் ஏற்பட்டது. அப்போதுதான் இந்த சமூகத்துடைய குரலாக நவமணி பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தீ வைப்புகளுக்கு மத்தியில், எங்கள் நிறுவனத்தை உடைத்து நாசமாக்கியதற்கு மத்தியிலும் இந்தப் பத்திரிகையை சமுதாயத்தின் குரலாக தொடர்ந்து வெளியீட்டு வருகின்றோம். இருக்கின்ற பத்திரிகையை, எதுவும் செய்யாவிட்டாலும் குறைந்த பட்சம் வாங்கிப் படித்தாவது இதனை கைதூக்கி விடவேண்டும்.
இதைக் கூறுவதற்குக் காரணம் இருக்கின்றது. ஒரு சமூகத்துடைய கருத்து, ஒரு சமூகத்துடைய எதிர்பார்ப்பு, அபிலாசைகளை அந்த சமூகத்துடைய பத்திரிகையின் மூலமாகத்தான் வெளிவரும்.
இந்த ஊடகம் மூலமாகத்தான் நாங்கள் உரத்துச் சொல்லாம். ஆகவேதான் இந்த சமுதாயத்துக்கு ஒரு பத்திரிகை அல்ல பல பத்திரிகைகள் தேவை. இன்று இந்த நாட்டிலே 49 வானொலிகள் இருக்கின்றன. இதுவரைக்கும் முஸ்லிம்களுக்காக ஒரு வானொலி இல்லை. இப்பொழுதுதான் செரண்டிப் என்ற புதிய வானொலிச் சேவை ஆரம்பிக்கப்பட்டு இணையம் வாயிலாக அது ஒலிபரப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மற்றும் இனிவரும் காலத்தில் உதயம் என்ற தொலைக்காட்சியும் விரைவில் வர இருக்கின்றது. இது சமூக முயற்சிகள். இந்த சமூகத்தினுடைய பின்னணியிலே இருக்கின்ற சிலர் இதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவேதான் இந்தச் சந்தர்ப்பத்திலே இந்த நவமணியை வளர்ப்பது நவமணியை மட்டுமல்ல இந்த முஸ்லிம் சமூகத்துக்காக வெளிவருகின்ற பத்திரிகைகளை வாங்கிப் படிக்க வேண்டும்.
சமூகத்துக்காக வருகின்ற பத்திரிகைகள் எவ்வளவோ கஷ்டப்பட்டு சமூகத்துடைய பிரச்சினையை சொல்கின்றன. சமூகத்துடைய தேவையைச் சொல்கின்றன. சமூகத்துக்குத் தேவையான அறிவூட்டல்களைச் சொல்கின்றன. இந்த சமூகத்துக்கு குரல் கொடுக்கின்ற ஊடகங்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது சமூகத்தின் கடமை என்று தெரிவித்தார்.





