கௌரவ கலாநிதி பட்டம் பெற்ற முன்னாள் அமைச்சர் மன்சூருக்கு கல்முனை மாநகர சபையில் வாழ்த்து!

Written By avathani Media Network on Tuesday, April 12, 2016


(அஸ்லம் எஸ்.மௌலானா)

முன்னாள் வர்த்தக, வாணிப, கப்பல்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமைக்காக கல்முனை மாநகர சபையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் இத்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றுகையில்;

"1977ஆம் ஆண்டு தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஐ.தே.க. அரசாங்கத்தில் கல்முனைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்ட அமைச்சராக, கபினட் அமைச்சராக பதவிகளை வகித்து பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த ஏ.ஆர்.மன்சூர் இன, மத, பிரதேச வேறுபாடு எதுவுமின்றி சேவையாற்றியுள்ளார். முஸ்லிம்களைப் போன்றே தமிழர்களையும் அரவணைத்து சென்றார். 

பின்னர் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைத்து கொண்டதன் காரணமாக தலைவர் ரவூப் ஹக்கீமின் சிபார்சின் பேரில் 2002ஆம் ஆண்டு குவைத் தூதுவராக நியமனம் பெற்ற அவர் தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு சுமார் 600 கோடி ரூபாவை பெற்றுக் கொடுத்து, அதன் பௌதீக வள அபிவிருத்திகளுக்கு பெரும் பங்களிப்பு செய்திருந்தார். அதற்காகவே அவருக்கு அந்த பல்கலைக்கழகம் இவ்வாறான உயர் கௌரவத்தை வழங்கியுள்ளது.

அதற்காக எமது மாநகர சபையானது அவரை வாழ்த்திப் பாராட்டுவதுடன் தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு நன்றியையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது" என்றார்.

இத்தீர்மானத்தை வழிமொழிந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் கே.ஏகாம்பரம்;

முன்னாள் அமைச்சர் மன்சூர் இனவாதம் இல்லாத ஓர் அரசியல்வாதி. தமிழ் பகுதிகளின் அபிவிருத்திகளிலும் கணிசமான பங்களிப்பை செய்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களுக்கு அரச தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளார்" என்றார்.

மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.ஆர்.அமீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், எம்.கமலதாசன், ஏ.எச்.எச்.ஏ.நபார், எம்.எம்.சாலிதீன், ஏ.ஏ.பஷீர் ஆகியோரும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் ஆற்றிய போற்றத்தகு சேவைகள் பற்றி நினைவூட்டி, உரையாற்றினர்.

இறுதியாக மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர், குறித்த தீர்மானத்தை நிறைவுறுத்தி, வாழ்த்துரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து அத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதனை முன்னாள் வர்த்தக, வாணிப, கப்பல்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு சபைச் செயலாளரை முதல்வர் பணித்தார்.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.