மாகாண இலச்சினை மாறுபாடு; அரசியலமைப்பை மீறும் பாரதூரமான விடயம் என்கிறார் முக்தார்!

Written By avathani Media Network on Thursday, April 7, 2016


(அஸ்லம் எஸ்.மௌலானா)

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு, கடந்த 10 வருடங்களாக அவ்விரண்டு மாகானங்களும் தனித்தனியாக செயற்பட்டு வருகின்ற நிலையில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தமது கடிதத் தலைப்பில் இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்திற்கான இலச்சினையை பயன்படுத்தி வருவதானது நாட்டின் அரசியலமைப்பை மீறுகின்ற மிகவும் பாரதூரமான விடயமாகும் என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு, அவை இரண்டும் தனித்தனியாக இயங்கி வருகின்றன.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்தபோது அதன் உத்தியோகபூர்வ இலச்சினையானது யாழ், நெற்கதிர் மற்றும் மீன் என்பவற்றைக் கொண்டிருந்தது. அம்மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் வட மாகாண சபையின் இலச்சினையானது பனை பொறிக்கப்பட்டதாகவும் கிழக்கு மாகாண சபை இலச்சினையானது மீன், மான் மற்றும் கழுகு ஆகிய பிராணிகளை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டு, பாவனையில் இருந்து வருகின்றன.

ஆனால் கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழு சில சந்தர்ப்பங்களில் தமது கடிதத்தலைப்பில் இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்திற்கான இலச்சினையை பயன்படுத்தி வருவதை அவதானிக்கின்றோம். குறிப்பாக நாளை மறுதினம் சனிக்கிழமை (09) கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்படவுள்ள போட்டிப் பரீட்சை ஒன்றுக்கு அதன் செயலாளரினால் பரீட்சாத்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அனுமதி அட்டையில் அந்த இலச்சினையே பொறிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் செயலாளர் ஒருவர் இவ்வாறு நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் சட்ட ரீதியற்ற செயற்பாட்டில் ஈடுபடுவது என்பது மிகவும் பாரதூரமான குற்றமாகும்.

மாகாண அரச சேவை ஆணைக்குழுவென்பது அந்த மாகாண நிர்வாகத்தை கொண்டு நடத்துவதுடன் அங்கு ஏற்படுகின்ற பிணக்குகளை தீர்த்து வைக்கின்ற பணிகளையும் மேற்கொள்கின்ற ஒரு முக்கிய நிறுவனமாகும். இந்நிலையில் அதன் செயலாளர் பொறுப்பற்ற முறையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் எனில் அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரச ஊழியர்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்?

எனவே நாட்டின் அரசியலமைப்புக்கு முரணாக, நடைமுறையில் இல்லாத, செயலிழந்த ஒரு சபையின் இலச்சினையை கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கையில் பயன்படுத்தியுள்ள குறித்த செயலாளரை உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தி, அவரை அப்பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இதற்கு முன்னரும் இந்த செயலாளர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி செயற்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.