Google நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள Street View என்னும் நவீன தொழிநுட்பம் தொடர்பாக, அதன் சாதக பாதகங்களை விளக்கி, சமூகத்திற்கு அது தொடர்பான விழிப்பூட்டல்களை வழங்கும் நோக்குடன் கடந்த 23:03:2016 அன்று சுருக்கமாக ஒரு சிறிய கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தேன்.
அக்கட்டுரையானது மடவள நியூஸ், அவதானி, இம்போர்ட் மிரர் மற்றும் ஜப்னா முஸ்லிம் போன்ற முன்னணி இணையத்தளங்களிலும் எனது உத்தியோகபூர்வ இணையத்தளமான ஸ்ரீலங்கன் முஸ்லிம் இணையதளத்திலும் பிரசுரிக்கப்பட்டு மிகவும் கணிசமான தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பரவலாகவே சென்றடைந்திருந்தது.
இருந்தபோதிலும் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள, இதன் பின்னர் ஏற்படவிருக்கின்ற கலாச்சார ரீதியான பாதகங்கள் தொடர்பில் அக்கட்டுரையில் மேற்கோள்காட்டப்பட்டுள்ள தரவுகள், எச்சரிக்கைகள் எதையுமே கருத்தில் கொள்ளாது, வெறுமே "நவீன தொழிநுட்பத்தின் முன்னேற்றம் மனிதனின் நன்மைக்கே" என்னும் ஒரேயொரு வரட்டுத்தனமான "பாரம்பரிய" வாதத்தையும், வழக்காறையும் மாத்திரம் பல்லவியாக வைத்துக்கொண்டு பலரும் அக்கட்டுரையினை விமர்சித்து அதன் நோக்கத்திற்கு மாசு கற்பித்திருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.
நவீன தொழிநுட்பத்தின் முன்னேற்றமானது மனித குலத்திற்கு நன்மை பயக்கூடியது என்பதிலோ, அந்த முன்னேற்றத்திற்கு சமூக அக்கறையுள்ள யாரும் எந்தவழியிலும் குறுக்கே நிற்கமாட்டார்கள் என்பதிலோ எமக்கு மாற்றுக்கருத்துக்கள் கிடையாது.
ஆனால் நவீன தொழிநுட்பத்தின் அதீத வளர்ச்சி என்னும் பெயரால் தனிநபர்களுடைய உரிமைகள் மீறப்பட்டு அவர்களுடைய மானம், மரியாதைகள் பகிரங்கப்படுத்தப்படுவதை எவ்வகையிலும் நாம் அனுமதிக்கமுடியாது.
Google Street View தொழிநுட்பமானது அதன் பெயருக்கேற்றாற்போல் நாட்டிலுள்ள வீதிகளை மாத்திரம் படம்பிடித்து வெளியிட்டிருந்தால் இதில் யாருமே கேள்விகள் கேட்கப்போவதில்லை. ஏற்கனவே கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள Google Loacal Map மற்றும் Google Earth ஆகிய மென்பொருட்கள் அவ்வாறுதான் வெளியிடப்பட்டுள்ளன. அவையிரண்டிலும் தனிநபர் சுதந்திரத்தை, இரகசியத்தை கசியவிடுவது போன்று எந்தவொரு பதிவுகளும் இருக்கவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் அது தொடர்பாக யாரும் அலட்டிக்கொள்ளவோ, எதிர் கேள்விஎழுப்பவோ இல்லை.
ஆனால் இப்போது புதிதாக வெளிவந்துள்ள Google Street View வினை பொறுத்தவரைக்கும் அது முன்னைய தொழினுட்பங்களை போன்றதல்ல. மாறாக வீதிகளை படம்பிடிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு வீதிகளில் நின்றுகொண்டே தனிநபர்களுடைய வீடுகளுக்குள் அத்துமீறி கமராக்களை நுழைவித்து, படம்பிடித்து அவை இணையதளங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன. கூகுள் நிறுவனமானது இவ்வாறு தனிநபர் உரிமையில் அடாத்தாக உள்நுழைந்து அத்துமீறியபோதுதான் இந்த சர்ச்சையும் விமர்சனமும் வெளிக்கிளம்பியுள்ளது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
வீதியில் நடமாடுகின்ற பெண்கள் கூட இது Google Street View கமரா என்பதை அறியாத காரணத்தினால்தான் அதில் கவனயீனமாக இருந்திருக்கிறார்கள். எதோ ஒரு வித்தியாசமான வாகனம் வருகிறதென்று அதை பார்த்துக்கொண்டு நின்ற நபர்கள்தான் இந்த Google Street View கமராக்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். அதுவே அவர்களுக்கு இது ஒரு நவீன தொழிநுட்பத்தை கொண்ட சக்தி வாய்ந்த கமரா என்றோ, இதன் மூலம் தாம் படம்பிடிக்கப்படுகிறோம் என்றோ, அப்புகைப்படங்கள் பகிரங்க இணையத்தளத்தில் வெளிவரும் என்பதையோ அவர்கள் முன்கூட்டி அறிந்திருந்தால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புள்ள எந்தவொரு பெண்ணும் அந்த கமராவுக்கு முன்னால் அல்லது அவ்வாகனத்தில் அருகில் கூட நின்றிருக்கமாட்டாள் என்பது கண்கூடு.
அதேபோன்று சமூக உணர்வென்பது கடுகளவும் இல்லாமல் இன்று கூகுள் நிறுவனத்தினுடைய இந்த அசிங்கத்துக்கு வக்காலத்து வாங்குகின்ற அதிபண்டித மேதாவிகள் கூட அடுத்த தடவை இந்த Google Street View வாகனம் ஊருக்குள் நுழைகின்ற போது தங்களுடைய பொறுப்பிலுள்ள பெண்களை அந்த விஷேட வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி சக்திவாய்ந்த கமராக்களுக்கு முன்னால் "நவீன தொழிநுட்பம்" என போஸ் கொடுத்துக்கொண்டு நிற்பதற்கு அனுமதிப்பார்களா?
மேலும் ஒரு பெண் வீதியால் செல்கின்றபோது அப்பெண்ணுடைய அனுமதியில்லாமல் அவளை புகைப்படம் பிடிப்பது பற்றியும் அப்புகைப்படத்தை முகத்தை மாத்திரம் மறைத்துவிட்டு இணையதளத்தில் வெளியிடுவது தொடர்பிலும் கூகுள் நிறுவனத்திற்கு வக்காலத்து வாங்குகின்ற இந்த மேதாவிகள் தங்களுடைய நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவிப்பார்களா?
ஒரு பெண் தன்னுடைய அவசரத்தேவைக்காக வீதிக்கு இறங்கிவிட்டாள் என்பதற்காக அவளை முப்பரிமாண தோற்றத்தில் சுற்றிவளைத்து படம்பிடித்து இணையதளத்தில் பதிவேற்ற முடியுமா?
முகத்தை மறைத்துத்தான் பதிவேற்றப்பட்டுள்ளது என்பதற்காக அந்த அசிங்கத்தை நாம் அங்கீகரிக்கமுடியுமா?
இதே நடைமுறையை இந்த மேதாவிகளின் பொறுப்பிலுள்ள பெண்களுடைய விடயத்தில் கூகுள் நிறுவனத்தை போன்று வேறு யார் மேற்கொண்டாலும் "தொழிநுட்ப முன்னேற்றம்" என்ற வறட்டுத்தனமான நியாயத்தை காரணமாக வைத்து அதனையும் இவர்கள் அங்கீகரிப்பார்களா?
இஸ்லாமிய மார்க்கம் பெண்களை பாதுகாக்கும்படியும் கண்ணியப்படுத்தும்படியும் இந்த சமூகத்துக்கு விடுத்த அறிவுரையை இந்த முற்போக்கு(?)வாதிகள் நடைமுறைப்படுத்துகின்ற இலட்சணம் இதுதானா?
நினைத்துப்பார்க்கும்போதே இது ஒரு அசிங்கமான, அருவருக்கத்தக்க, படுகேவலமான நடைமுறையாக தெரியவில்லையா?
மாத்திரமன்றி இந்த Google Street View கமராக்கள் வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்களை மாத்திரம் படம் பிடிக்கவில்லை. மாறாக வீடுகளுக்குள்ளும் வீட்டு வாசல்களிலும் சுதந்திரமாக நின்றுகொண்டிருந்த, நடமாடிக்கொண்டிருந்த பெண்களையும்தான் அந்த கமராக்கள் குறிவைத்திருக்கின்றன.
நமது நாட்டை, குறிப்பாக கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை எல்லாருடைய வீடுகளிலும் வீடுகளுக்குள் “அட்டாச்” செய்யப்பட்ட குளியலறைகள் இருப்பதில்லை. வீட்டுக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளில் குளிக்கின்ற, குறைவான மேலாடைகளுடன் கிணற்றடிகளில் நின்றுகொண்டு துணி துவைக்கின்ற பெண்களும் கூட இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். வீட்டு முற்றத்தில் அளவான ஆடைகளுடன் குடும்ப சகிதம் அமர்ந்திருக்கின்ற நடைமுறையும் நமது பிரதேசங்களில் இருக்கவேதான் செய்கிறது. பகல் வேளைகளில் வீட்டுக்கு முன்னால் போடப்பட்டுள்ள ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுகின்ற இளம் சகோதரிகளும் மிகத்தாராளமாகவே இருக்கிறார்கள்.
அவ்வாறு ஒரு பெண் தனது வீட்டு முற்றத்தில் குறைவான ஆடைகளுடன் அமர்ந்திருக்கும்போது, கிணற்றடியில் துணி துவைக்கும் போது, நெஞ்சுப்பகுதிவரை பாவாடையை மாத்திரம் கட்டிக்கொண்டு கிணற்றில் வாளியால் நீரை அள்ளிக்குளிக்கும் போது, குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும்போது பொதுச்சுவருக்கு மேலால் ஒருவரோ அல்லது பலரோ எட்டிப்பார்த்தால் அது நாகரீகமான செயலாக இருக்குமா?
அவ்வாறு எட்டிப்பார்த்து அப்பெண்களை புகைப்படம் பிடித்தால், பிடித்த புகைப்படங்களை முகத்தை மட்டும் மறைத்துவிட்டு இணையதளங்களில் அப்பெண்ணின் வதிவிட முகவரியோடு பரவவிட்டால் அதனுடைய பாரதூரம் என்னவாக இருக்கும்?
இன்று Google Street View என்பது “தொழிநுட்பத்தின் முன்னேற்றம்” என்று கூறிக்கொண்டு அதற்கு வக்காலத்து வாங்கி நியாயப்படுத்துபவர்கள் தங்களுடைய பொறுப்பிலுள்ள பெண்களுக்கு இவ்வாறானதொரு அபகீர்த்தியான நிலைமை ஏற்பட்டால் அதையும் “தொழிநுட்ப முன்னேற்றம்” என்று கூறிக்கொண்டு தாராள(?)மனதுடன் ஏற்றுக்கொள்வார்களா?
ஆனால் அதைத்தான் இப்போது கூகுள் நிறுவனம் செய்துள்ளது.
தங்களுடைய வீடுகளில், வீட்டு முற்றங்களில், கிணற்றடிகளில் மிகவும் சுதந்திரமாக அமர்ந்திருந்த, வேலை செய்துகொண்டிருந்த, ஊஞ்சலாடிக்கொண்டிருந்த இளம்பெண்கள் Google Street View கமராக்களினால் இலக்குவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய முகங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் வசிக்கின்ற வீடுகளும், வீதிகளின் பெயர்களும் மிகத்தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தங்களுடைய வீட்டின் பொதுச்சுவருக்கு மேலால் ஒருவர் எட்டிப்பார்ப்பதைக்கூட அங்கீகரிக்காத இந்த அதிமேதாவிகள், Google Street View கமராக்கள் ஒரு வீட்டின் பொதுச்சுவருக்கு மேலால் எட்டிப்பார்த்து அவ்வீட்டிலுள்ள பெண்களை அரைகுறை ஆடைகளுடன் புகைப்படம் பிடித்தது மாத்திரமன்றி அதை இணையத்தளத்தில் பதிவேற்றியதைக்கூட வெட்கம், ரோஷம், சூடு, சொரணை என்பது கொஞ்சமும் இல்லாமல் "தொழிநுட்ப முன்னேற்றம்" என்னும் அழுக்குப்படிந்த போர்வைக்குள் அந்த அசிங்கத்தை அங்கீகரிக்கிறார்களே, மூடி மறைக்கிறார்களே, இவர்களை விடவும் கேவலமான, கீழ்த்தரமான இழிபிறவிகள் இந்த நூற்றாண்டில் வேறு யாராவது இருப்பார்களா?
"வீட்டிலுள்ளவர்களின் அனுமதியின்றி வீதியில் நின்று கொண்டு ஒரு வீட்டின் உள்ப்புறத்தை யாராவது உற்றுப்பார்த்தால் அவனுடைய கண்களை குத்தி குருடாக்குங்கள்" என்று குறித்த அவ்வீட்டாருக்கு அனுமதி வழங்குகிறது புனித இஸ்லாமிய மார்க்கம்.
ஆனால் இங்கே கூகுள் நிறுவனம் அதி தொழிநுட்ப கமராக்களையே ஒரு வீட்டினுடைய பொது மதிலுக்கு மேலால் உயர்த்தி உள்ளரங்கங்களை மிகத்துல்லியமாக படம்பிடித்து உலகம் முழுவதும் பார்த்து ரசிக்கின்ற வண்ணம் பகிரங்கமாக வெளியிடுகின்றபோது அதை மாத்திரம் எவ்வாறு தொழிநுட்ப நாகரீகம் என்று இவர்களால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது?, அங்கீகரிக்கமுடிகிறது? அந்த அசிங்கத்துக்கு வக்காலத்து வாங்கமுடிகிறது?
யார் தன்னுடைய மனனவியின் விடயத்தில் ரோஷ உணர்வின்றி நடந்துகொள்கிறானோ அவன் எம்மைச்சேர்ந்தவன் இல்லையென்பது நபிகளாரின் எச்சரிக்கை. இது மனைவிமார்களுக்கு மட்டுமல்ல, ஒரு ஆணுடைய பொறுப்பிலுள்ள அனைத்துப் பெண்களுடைய விடயத்திலும் கட்டாயமாக இந்த ரோஷ உணர்வு ஒரு ஆணுக்கு இருக்கவேண்டும்.
Google Street View கமராக்கள் மூலம் தங்களுடைய வீடுகளின் உட்புறங்களோ, தங்கள் பொறுப்பிலுள்ள பெண்களோ படங்களாக வெளிவரவில்லை என்ற தைரியத்திலும் சுய நலத்திலும்தான் சில அதிபண்டித மேதாவிகள் இதை நியாயப்படுத்தியும் அந்த அசிங்கத்துக்கு ஆதரவு வழங்கியும் வருகிறார்கள்.
ஆனால் தன்னுடைய மனைவி மார்புப்பகுதியில் முந்தானையின்றி கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருக்கும்போது இந்த Google Street View கமராவின்மூலம் சுற்று மதிலுக்கு மேலால் படம்பிடிக்கப்பட்டு அது இணையத்தளத்தில் வெளியான செய்தியைக்கேட்டு தன்மானத்தை பற்றிய கவலையுடன் கண்ணீர் விட்டு அழுகிறானே ஒரு ஏழைத்தொழிலாளி, அவனுடைய உள்ளத்தை சற்று தட்டிப்பாருங்கள். அவன் தன்னுடைய மனைவியின் விடயத்தில் வெளிப்படுத்துகின்ற ரோஷ உணர்வின் வீரியத்தை புரிந்துகொள்வீர்கள்.
அந்த மானமுள்ள ஏழைப்பெண்ணை அணுகி அவளுடைய உணர்வுகளை சற்று உரசிபாருங்கள், இந்த தொழிநுட்ப முன்னேற்றம் என்பது அவளுடைய வாழ்க்கையில் விளையாடியுள்ள கோரத்தாண்டவத்தை உணர்ந்துகொள்வீர்கள்.
Google Street View என்ற இந்த உயர் தொழிநுட்பத்தை நன்மையே அதிகம் என்று வானளாவ முழங்குகின்ற மெத்தப்படித்த மேதாவிகள் அந்த நன்மையின் யதார்த்தத்தை குறித்த ஏழைப்பெண்ணிடம் சென்று விளக்குவார்களா?
அல்லது இதேபோன்றதொரு அபாயகரமான நிலைமை தங்களுடைய பொறுப்பிலுள்ள பெண்களுக்கும் நிகழ்ந்திருந்தால் அதையும் இவ்வாறுதான் “உயர் தொழிநுட்பத்தின் முன்னேற்றம்” என்று கூறி வெட்கமில்லாமல் அங்கீகரிப்பார்களா?
உயர் தொழிநுட்பத்தை ஒரு இஸ்லாமியன் பயன்படுத்தவில்லை என்பதற்காக அவன் அழ்ழாஹ்விடத்தில் பாவியாக மாறிவிடப்போவதில்லை. ஆனால் அதே உயர் தொழிநுட்பம் என்ற அழுக்குப்படிந்த போர்வைக்குள் இவ்வாறான அசிங்கங்களையெல்லாம் அங்கீகரிக்க வெளிக்கிளம்பினால் அவன் அழ்ழாஹ்விடத்தில் பாவியாக மாறுவது, மாத்திரமல்ல மனித குலத்தோடு ஒன்றித்து வாழ்வதற்கே தகுதியும் தராதரமுமற்ற ஒரு இழிபிறவியாகவே மாறிப்போய்விடுவான் என்பதை இந்த முற்போக்கு(?)வாதிகள் யாரும் மறந்துவிடக்கூடாது.
அதேபோன்று இந்த அசிங்கத்தை நியாயப்படுத்துவதற்காக சில அரைவேக்காடுகளும் கிணற்றுத்தவளைகளும் அண்மையில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டமொன்றை கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.
காத்தான்குடியிலுள்ள ஒரு ஏகத்துவ பிரச்சார அமைப்பு நடாத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் பெண்கள் கலந்துகொண்டதையும் அதில் அப்பெண்களுடைய முகங்கள் தெரியும் வண்ணம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவை இணையதளங்களில் பதிவேற்றப்பட்டதையும் மேற்கோள்காட்டி கூகுள் நிறுவனத்தினுடைய கேவலத்திற்கு நியாயம் கற்பிக்க விளைகின்றனர்.
பெண்களை நேரடியாக படம்பிடித்து இணையதளங்களில் பதிவேற்றுகின்ற தஃவா அமைப்புக்களுடைய செயற்பாட்டை நான் சரிகாணவில்லை. அந்த நடைமுறை மாற்றப்படவேண்டும். குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தஃவா அமைப்புக்கள் போதியளவு கவனம் செலுத்தவேண்டும்.
ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு செல்கின்ற பெண்கள் யாருமே அரைகுறை ஆடைகளுடன் செல்வதில்லை. மாறாக முழுமையான ஹிஜாப் ஆடையுடன், சிலர் முகங்களை கூட மூடியவாறுதான் செல்வதுண்டு. மேலும் ஆர்ப்பாட்டங்களின் போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் செய்யப்படும் என்பதும் அவ்வாறு செல்பவர்களுக்கு முன்கூட்டியே நன்கு தெரியும். அதனால் அதற்கேற்றவாறு தங்களுடைய ஆடைகளை சரிசெய்துகொண்டு முடியுமானவரை முகங்களை மறைத்தவண்ணமே ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள்.
எனவே அதையும் இதையும் இணைத்து கூகுள் நிறுவனம் உள்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்த அசிங்கத்தை ஒரு தஃவா அமைப்பு சமூகத்தின் நலன்கருதி நடாத்திய ஆர்ப்பாட்டத்தோடு தொடர்புபடுத்தி விமர்சிப்பது வடிகட்டிய முட்டாள்த்தனமேயன்றி வேறில்லை.
இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் இன்று தங்களை நவீன(?)த்துவவாதிகள், முற்போக்கு(?)வாதிகள் என்று படங்காட்டிக்கொள்கின்ற மேதாவிகள்தான் அந்த தஃவா அமைப்பு ஒரு சிறுமியின் அந்தரங்க பிரதேசத்திற்கு அருகிலுள்ள சூட்டுக்காயங்களை இணையதளங்களில் வெளியிட்டதாகக்கூறி சமூகவலைத்தளங்களில் ஒன்றுகூடி, ஒப்பாரி வைத்து, அழுது புலம்பினார்கள். ஆனால் இன்று கூகுள் நிறுவனம் தங்களுடைய வீட்டுக்குள் சுதந்திரமாக நடமாடிய பெண்களை முன்னாலும் பின்னாலும் இடமும் வலமும் என முப்பரிமாணத்துடன் தாறுமாறாக படம்பிடித்து "மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்காத" கதையாக வீட்டு முகவரியுடன் இணையதளத்தில் பதிவேற்றிய அசிங்கத்தை "தொழிநுட்ப முன்னேற்றம்" என்று கூறி அதற்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.
இதிலிருந்தே இந்த முற்போக்குவாதிகளுடைய தார்ப்பாயில் வடிகட்டிய படு முட்டாள்த்தனம் வெட்டவெளிச்சமாகிறது.
“தொழிநுட்ப அறிவற்ற பட்டிக்காட்டான் எழுதிய கட்டுரை இது.”
இம்மாதம் கடந்த 23ஆம் திகதி Google Street View தொடர்பாக என்னுடைய முதலாவது கட்டுரை வெளியாகியவுடன் முகநூலில் மேற்கண்டவாறு ஒரு விமர்சனத்தை ஒரு முற்போக்கு(?)வாதி முன்வைத்திருந்தார்.
இந்த Google Street View வெளியிடப்பட்ட இம்மாதம் கடந்த 22ஆம் திகதி தொடக்கம் அதுபற்றி நான் என்னுடைய இரண்டாவது கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்ற இன்றுவரைக்கும் அந்த Google Street Viewவினை எவ்வாறு பயன்படுத்துவதென்று தெரியாமல் அதிகமான நபர்கள் தடுமாறி வருவதை நாம் காண்கிறோம்.
விழிப்புணர்வுக்கட்டுரை எழுதிய என்னையே தொடர்புகொண்டு அதை செயல்ப்படுத்துகின்ற முறையை சொல்லித்தாருங்கள் என்று பலர் வேண்டுகோள் விடுப்பதையும் காணமுடிகிறது. மாத்திரமல்லாது கணிசமான இணையதளங்கள் இன்னும் கூட அந்த Google Street View வினை எவ்வாறு பயன்படுத்தவதென்று மக்களுக்கு தினந்தோறும் வகுப்பு நடாத்திக்கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.
ஆனால் Google Street View பற்றிய முதலாவது செய்தி 22ஆம் திகதியன்று பிற்பகல் வேளையிலேயே பரவலாக ஊடகங்களில் வெளியாகியது. அவ்வாறு அந்த செய்தி வெளியிடப்பட்ட அடுத்த மணித்தியாலத்திலேயே அந்த Google Street View செயலியை இணைய இணைப்பினூடாக கணணியில் செயற்படுத்தி அதனை உபயோகிக்கின்ற முறைமையினை கண்டறிந்து அதன் மூலம் என்னுடைய சொந்த பிரதேசமான காத்தான்குடியை தேடியெடுத்து அப்பிரதேசத்தை அதிகபட்சமாக சல்லடை போட்டுத்தேடி அதன்மூலம் சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் சேகரித்திருந்தேன்.
மாத்திரமல்லாது அந்த சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பார்க்கின்றபோது அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படவிருக்கின்ற ஆபத்தை உடனடியாக உணர்ந்தறிந்து காலந்தாழ்த்திவிடாமல் மறுநாள் விடிவதற்குள் அதை கட்டுரையாக எழுதி, வடிவமைத்து மின்னஞ்சல் மூலமாக இணையதளங்களுக்கும் அனுப்பி வைத்தேன். சுருக்கமாக சொல்லப்போனால் Google Street View என்ற தொழிநுட்பம் வெளியாகிய வெறும் பத்து மணி நேரத்திற்குள்ளேயே, அதுபற்றி மக்கள் புரிந்துகொள்வதற்காக அல்லாடிக்கொண்டும் திணறிக்கொண்டும் இருந்த அகாலவேளையிலேயே அது தொடர்பான என்னுடைய விமர்சனக்கட்டுரை பல்வேறு இணையத்தளங்களிலும் தடலாடியாக வெளிவந்தது.
அப்படியானால் இந்த இணையதளங்கள் மற்றும் நவீன தொழிநுட்பங்களுக்கும் எனக்குமிடையிலான உறவும் நெருக்கமும் தொடர்பும் எந்தளவுக்கு இறுக்கமாக இருந்திருக்கிறது என்பதை என்னை “பட்டிக்காட்டான்”என்று விமர்சித்த அந்த பட்டணத்தார்(?)கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும் Google Street View என்பது ஒரு தொழிநுட்பம் தொடர்பானது என்பதால் சமகாலத்தில் இதுபற்றிய சாதக பாதகங்களை சகலரும் “அறிந்திருப்பார்கள், இலகுவில் புரிந்துகொள்வார்கள்” என்ற நல்லெண்ணத்திலும் நம்பிக்கையிலும்தான் இது பற்றிய என்னுடைய முதலாவது கட்டுரையை மிகவும் சுருக்கமாக எழுதி வெளியிட்டேன். அத்தோடு இத்தொழிநுட்பத்தில் தனிநபர்களுடைய, சமூகத்தினுடைய மானம், மரியாதைகள் கேள்விக்குறியாகியிருந்ததும் அது தொடர்பாக நான் மூடலாக குறிப்பிட்டதற்கான முக்கியமான காரணியாகும்.
ஆனால் அந்த மூடலின் அர்த்தத்தை முழுமையாகப்புரிந்துகொள்ளாமல் தங்களை முற்போக்கு(?)வாதிகள் என்று கொக்கரித்துக்கொள்கின்ற சில முக்கால் மூளைகள் கூகுள் நிறுவனத்தினுடைய அசிங்கத்திற்கு குருட்டுத்தனமாக வக்காலத்து வாங்க வெளிக்கிளம்பியதன் வெளிப்பாடாகவேதான் இந்த இரண்டாவது கட்டுரையை வரைந்துள்ளேன். மேலும் முதலாவது கட்டுரையிலுள்ள சுருக்கத்தின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியாத முற்போக்கு(?)வாதிகளுக்கும் "மண்டையில்" உறைக்கும்படியாக இருக்கவேண்டும் என்றுதான் நேரடியாகவும், வெளிப்படையாகவும் சில தர்க்கரீதியான கேள்விகளையும் காரசாரமாக முன்வைத்துள்ளேன்.
இதில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்திற்கும் குறித்த முற்போக்கு(?)வாதிகள் அனைவரும் தீர்க்கமான பதிலை பகிரங்கமாகவே பதிவு செய்யவேண்டும்.
அதேநேரம் Google Street View தொடர்பாக இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்கின்ற தஃவா அமைப்புக்கள் தங்களுடைய அடிமட்ட ஆதரவாளர்களை வைத்து சமூக வலைத்தளங்களில் தெருச்சண்டை நடாத்துவதை தவிர்த்து இதுபற்றிய தமது அமைப்புரீதியான நிலைப்பாடு என்னவென்பதை காலந்தாழ்த்தாமல் உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவிக்கவேண்டும்.
ஷவ்வால் மாத தலைப்பிறை விடயத்தில் மாத்திரம் சர்வதேச மட்டத்தில் ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டு நவீன தொழிநுட்பத்திற்கும் தமது இயக்கங்களுக்கும் இடையிலான நெருக்கத்தை வருடந்தவறாமல் பறைசாற்றுகின்ற தஃவா இயக்கங்கள் குறித்த இந்த Google Street View விவகாரத்தில் இதுவரைக்கும் வாய் திறவாமல் கனத்த மௌனத்தை கடைப்பிடித்து வருவது ஆரோக்கியமான ஒரு நிலைப்பாடாகத்தெரியவில்லை.
மேலும் Google Street View வின் மூலம் சமூக மட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த தளம்பல் நிலை குறித்து பொறுப்புவாய்ந்த பிரதேச சிவில் அமைப்புக்கள், தலைமை நிறுவனங்கள் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும். கடந்த 2013ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் Google Street View வின் மூலமாக இவ்வாறான சர்ச்சைகள் மேலைத்தேய நாடுகளில் ஏற்பட்டபோது கூகுள் நிறுவனத்திற்கெதிராக முறையாக சில பெட்டிசன்கள் அனுப்பப்பட்டு சர்ச்சைக்குரிய அதிகமான புகைப்படங்கள் கூகுள் நிறுவனத்தால் Google Street View விலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் எமது பிரதேசங்களிலுள்ள சமூக நிறுவனங்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தி இதற்கான மாற்றுத்தீர்வு என்னவென்பது குறித்து கண்டறிவதற்கான முயற்சிகளை பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளவேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன்.



