வரட்சியான காலநிலை காரணமாக நீர்மின்சார உற்பத்தி வீழ்ச்சி

Written By avathani Media Network on Wednesday, March 9, 2016

வரட்சியான காலநிலை நிலவியுள்ளதை அடுத்து நீர்மின்சார உற்பத்தி மொத்த மின்சார அலகுகளில் 25 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்தமையே இந்த நிலைமை ஏற்படுவதற்குக் காரணமாகும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால குறிப்பிட்டார்.

ஆயினும் குடிநீருக்கு மற்றும் செய்கைகளுக்கு தேவையான நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் பிரகாரம் நாளாந்தம் 75 வீத மின்சார பிறப்பாக்கம் நிலக்கரி மற்றும் எரிவாயு பயன்பாட்டினால் மேற்கொள்ளப்படுகின்றது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் நாளாந்தம் 780 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படுவதாக மின்சார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மகாவலி திட்டத்திற்கு உட்பட்ட நீர்த் தேக்கங்களின் நீர்மட்டமும் துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கொத்மலை நீர்த் தேக்கத்தில் நீர் மட்டம் 32 வீதம் வரையும், விக்டோரியா நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 56 வீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மகாவலி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதவிர காசல்ரீ, மவுசாகலை மற்றும் சமனலவெவ ஆகிய நீர்த் தேக்கங்களினதும் நீர்மட்டத்தில் துரித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.