(அஸ்லம் எஸ்.மௌலானா)
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஆசியா பவுண்டேஷனின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டு வருகின்ற உள்ளூராட்சி வள நிலையம் உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறனை அதிகரிக்க பெரிதும் உதவும் என அந்த பவுண்டேஷனின் செயற்திட்ட தொழில்நுட்ப நிபுணர் எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி மற்றும் அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும், அவுஸ்த்ரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் உள்ளூராட்சி மன்றங்களில் ஆசியா பவுண்டேஷன் புதிதாக நடைமுறைப்படுத்தவுள்ள "உள்ளூராட்சி ஆளுகை" எனும் செயற்திட்டம் தொடர்பில் இதன்போது பவுண்டேஷனின் செயற்திட்ட தொழில்நுட்ப நிபுணர் எம்.ஐ.எம்.வலீத்தினால் அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
அங்கு அவர் மேலும் கூறுகையில்;
"உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் என அமைக்கப்பட்டு வருகின்ற இந்த உள்ளூராட்சி வள நிலையத்திற்காக ஆசியா பவுண்டேஷன் 10 இலட்சம் ரூபா நிதியோதுக்கீட்டை செய்துள்ளது. அந்த நிதியின் மூலம் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
குறிப்பாக 50 உத்தியோகத்தர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சியளிப்பதற்கு ஏற்ற வகையில் இந்த வள நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. அதற்குத் தேவையான இலத்திரனியல் உபகரணங்களும் வழங்கப்படும். அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பிலான வழிகாட்டல்களுக்குரிய நூலகம் ஒன்றும் இந்நிலையத்தில் ஏற்படுத்தப்படும்.
கிழக்கு மாகாணத்தில் எமது புதிய 'உள்ளூராட்சி ஆளுகை' செயற்திட்டமானது கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆலோசனை, வழிகாட்டலில் முன்னெடுக்கப்படவுள்ளது " என்று குறிப்பிட்டார்.

