பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நிவாரணம் பெற்றுக் கொள்ள ஜனாதிபதியினால் குழு நியமனம்

Written By avathani Media Network on Thursday, March 10, 2016

பல்வேறு சித்திரவதைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிய ஊடகவியலாளர்கள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் கீழ் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதிக்குள் தொழில்சார் ஊடகவியலாளராகப் பணியாற்றி துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுத்த ஊடகவியலாளர்கள் குறித்தே இவர்கள் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்படி, அநீதிகள் மற்றும் துன்புறுத்தல்கள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகியவற்றை எதிர்கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த விசேட குழுவின் மூலம் நிவாரணம் வழங்கப்படும். 

அநீதி இழைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் தமது தொழில்சார் அடையாளத்துடன், தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக உறுதிப்படுத்தக் கூடிய அனைத்து தரவுகள் மற்றும் தகவல்களை ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும். 

மேலும் இது குறித்த தகவல்களை, 

எஸ்.ரி.கொடிகார, 
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், 
ஜனாதிபதி அலுவலகம், 
கொழும்பு, 

என்ற முகவரிக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கலாம் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.