மகிந்த தவறுசெய்தால் தண்டனை உறுதி : எச்சரிக்கிறார் சம்பிக்க !!

Written By avathani Media Network on Tuesday, March 1, 2016

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் மரணம் கொலையென நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர். இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும் பொருந்தும் என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ரக்பி விளையாட்டு வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையு ம் கைதுசெய்து பழிதீர்க்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ரக்பி வீரர் தாஜுதீன் மரணம் கொலை என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது. இதையே நாம் கடந்த காலத்தில் இருந்து தெரிவித்து வந்தோம். இப்போது அந்த காரணிகள் உண்மையாகியுள்ளன. விளையாட்டு வீரரின் இந்த மரணம் எமது நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். கடந்த காலத்தில் இவ்வாறு பல நல்ல வீரர்களை நாம் இழக்க நேர்ந்தது. வீரர்களின் புறக்கணிப்பு, அச்சுறுத்தல், கொலை என மிகவும் மோசமான முறையில் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆகவே இவற்றை தடுக்கும் வகையில் செயற்படுவதுடன் மனித உரிமைகளை மட்டும் அல்லாது உயிர்களையும் பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையாகும். அதேபோல் நடந்த மோசமான சம்பவங்களுக்கு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும். இந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த விடயத்தில் மிகச்சரியாக செயற்பட்டு வருகின்றது.

மேலும் இந்த சம்பவத்தில் மஹிந்த குடும்பத்தினரை கைதுசெய்யவுள்ளதாக இதுவரையில் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரே இது தொடர்பில் எனது குடும்பம் கைதுசெய்யப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் கூறுகின்றார். இப்போது ரகர் வீரர் தாஜுதீன் மரணத்தில் தனது மகன் நாமல் ராஜபக் ஷ தொடர்புபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன எனவும். அந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் நாமல் ராஜபக் ஷவை கைதுசெய்யப் போவதாகவும் தனது மனைவி ஷிரந்தி ராஜபக் ஷவை கைதுசெய்யப்போவதாகவும் மஹிந்த ராஜபக் ஷ கூறுகின்றார்.

இவர்கள் மீது தனிப்பட்ட கோபமோ பழி தீர்த்துக்கொள்ளும் நோக்கமோ எமக்கு இல்லை. யார்மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பழிதீர்க்கவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இப்போது ரகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் ராஜபக் ஷவை கைது செய்வார்கள். அதன் பின்னர் கோத்தபாய ராஜபக் ஷவை கைதுசெய்வார்கள். பின்னர் பஷில் ராஜபக் ஷவை கைதுசெய்வார்கள். இறுதியில் தன்னை கைதுசெய்வார்கள் என்று அவர் கூறுவது வெறும் அனுதாபம் மட்டுமேயாகும்.

மக்கள் மத்தியில் தன்னை நியாயப்படுத்த இவ்வாறு நாடகம் போடுகின்றார். எவ்வாறு இருப்பினும் குற்றம் நடந்துள்ளது. அந்த குற்றத்தை யார் செய்தார் என்ற உண்மைகளை கண்டறிய வேண்டும். ரகர் வீரர் தாஜூதீன் கொலையில் யார் தொடர்பு பட்டிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சட்டரீதியில் தண்டிக்கப்படுவர். இது மஹிந்தவாக இருந்தாலும் அல்லது இந்த அரசாங்கத்தில் யாராக இருந்தாலும் சட்டம் செயற்படும் என அவர் குறிப்பிட்டார் .
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.