பொலன்னறுவை பிரதேச பள்ளிவாசலொன்றில் நடந்த குத்பாவில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. (வேறு இடங்களிலும் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.)
ஆச்சரியங்களைத் தாண்டி, இந்த ஆலிமின் செய்கையை பாராட்ட வேண்டியிருக்கிறது. சமூகத்தின் தேவை என்ன, சமூகத்தின் எரிகின்ற பிரச்சினை என்ன, சமூகம் எதிர்பார்க்கின்ற வழிகாட்டல் என்ன என்பது எதுவுமே சம்பந்தமில்லாமல் மணித்தியாலக் கணக்கில் ஒலிபெருக்கியை விட ஒலியைப் பெருக்கி நடத்துகின்ற சடங்காக குத்பாக்கள் மாறிப் போயிருக்கின்ற காலத்தில், இவ்வாறான உபயோகமுள்ள குத்பாக்கள் நிச்சயம் பாராட்டப்படத்தான் வேண்டும்.
பத்திரிகை வாசிப்பது தடைசெய்யப்பட்ட முகாமொன்றில் பல வருடங்கள் அடைபட்டுக் கிடந்து விட்டு, மிம்பரில் ஏறி நின்றால் தலைகவிழ்ந்து போன சமூகத்துக்கு முன்னால் எதையும் பேசிவிட்டுப் போகலாம் என்ற நினைப்பு பலருக்கு வந்துவிடுகிறது. கிதாபுகளில் படித்த விடயங்களைத் தவிர, பூமியை வளப்படுத்துவதற்காக, நிர்வகிப்பதற்காக தேவைப்படுகின்ற எந்த கோட்பாடுகளும் வழிமுறைகளும் தொடர்பில் இவர்களுக்கு எந்த அறிவுமில்லை. இந்தக் கோட்பாடுகளும் வழிமுறைகளும் கூட அல்லாஹுதஆலாவினாலு ரஸூலுல்லாஹ்வினாலும் சொல்லப்பட்டவைகள் என்பது கூட இவர்களுக்குத் தெரியாமலிருக்கிறது.
இஜ்திமா ஒன்றிலே உரையாற்றிய பெரியார் ஒருவர், ஸஹாபாக்கள் தஃவா செய்த முறையில்தான் தஃவா செய்ய வேண்டும். அவர்கள் நவீன கருவிகளை பாவிக்கவில்லை. அப்படி நவீன கருவிகளைப் பயன்படுத்தி தஃவா செய்ய முடியுமென்றிருந்தால் அந்த வழிமுறைகளை அப்போதே அல்லாஹுதஆலா ஸஹாபாக்களுக்குக் காட்டிக் கொடுத்திருப்பான் என முழங்குகிறார்.
மிம்பரிலே ஏறுகின்ற மற்றுமொரு கதீப், அல்லாஹுதஆலா கட்டளையிட்ட போதும் ஷைத்தான் மனிதனுக்கு ஸுஜூத் செய்ய மறுத்தான். ஷைத்தான் அல்லாஹ்வுக்கு மட்டுமே ஸுஜூத் செய்த ஒரிஜினல் தௌஹீத்வாதி என திருவாய் மலர்ந்தருளுகிறார். தான் பிறந்த முதல் நாள் தலைநோன்பு தினம் என்பதால் மார்க்க மேதை ஒருவர் அன்றைய தினம் முழுக்க தாயின் மார்பில் பாலருந்தாமல் நோன்பிருந்ததாக குத்பாவிலே புனைந்து தள்ளுகிறார்.
இதையெல்லாம் கேட்டுவிட்டு ஆமீன் சொல்லி விட்டுச் செல்லும் மகா ஜனங்களுக்கு முன்னால், அரசியலமைப்பு மாற்றம் பற்றி ஒருவர் பிரசங்கம் பண்ணியிருக்கிறார் என்பது வரலாறுதான்.
மிம்பர் மேடைகள் பூமியில் மனிதனுடைய இருப்பையும் வளப்படுத்தலையும் பற்றி மக்களுக்கு அறிவூட்ட வேண்டுமேயல்லாது மக்களை பூவுலகை வெறுக்கச் செய்வதாக இருக்கக் கூடாது. வானுலகம் செல்லு முன்னர் பூவுலகில் அவன் வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டும். எந்தச் சட்டத்தினால் தாம் ஆளப்படுகிறோம், எங்களது தீனை சுதந்திரமாக நடைமுறைப்படுத்துவதற்க சட்டத்தில் என்ன இடம் இருக்கிறது, எங்கு தடை இருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை.
ஆனாலும் இது பற்றியெல்லாம் நாங்கள் பேசுவதில்லை என ஒரு ஜமாஅத் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் சொல்லியிருக்கிறது. பட்டம் பெற்று வெளியேறி குத்பாக்கள் ஓதும் மௌலவிமார்களது பாடத் திட்டத்திலும் இவை இல்லை. உலகக் கல்வி அவர்களுக்குப் போதிக்கப் படுவதுமில்லை. உலக அறிவை இதற்குப் பின்னராவது தேடிப் பெற்றுக் கொள்வதுமில்லை.
எங்களது தலைவிதியை நிர்ணயிக்கவிருக்கின்ற அரசியலமைப்பு விவ காரங்கள் தொடர்பில் இவர்களிடம் சமூகம் எதை எதிர்பார்க்க முடியும்? குறைந்தபட்சம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் வர வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலாவது இவர்களுக்குக் கருத்துச் சொல்ல முடிகிறதா? மக்களை இடத்துக்கிடம் கூட்டி விளக்கம் கொடுப்பதனை விட சமூக விவகாரங் களை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விளக்கக் கூடிய கதீப்களை இந்த சில நாட்களுக்காவது மிம்பரில் ஏற்றினால் என்ன?
வரப்போகின்ற அரசியல் மாற்றத்தில் நாங்கள் கவனம் செலுத்தாத போது ரோஹிங்ய முஸ்லிம்களாகவோ, குஜராத் முஸ்லிம்களாகவோ நாங்கள் மாற முடியுமான நிலை இருக்கிறது. இந்த ஆபத்தை சமூகம் புரிந்து கொண்டு விழித்துக் கொள்ளாவிட்டால், பல தலைமுறைகளுக்கு முஸ்லிம் சமூகம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. எனவே, இது தொடர்பில் பள்ளிவாசல்களில், மிம்பர் மேடைகளில் உலமாக்கள் உரையாற்ற வேண்டியிருக்கிறது. பள்ளிவாசல்கள் இந்தப் பணியைச் செய்யாத விடத்து ஊர் மக்கள் பள்ளிவாசல்களை இது தொடர்பில் உசுப்பி விட வேண்டும்.
குத்பாக்களின்போது இரண்டாவது குத்பாவிலே அறபியில் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி என ஸஹாபாக்களின் பெயர் வரும்பொழுதெல் லாம் ‘ரழியல்லாஹு அன்ஹு’ என்ற சத்தமாய் சொல்லும் சமூகம், தமிழ் குத்பாவிலே எத்தனை முறை இவர்களின் பெயர்கள் வந்து விட்டுப் போனாலும் வாய்மூடி மௌனமாகவே இருக்கிறது. இப்படி எதற்கெல்லாம் வாய் திறக்க வேண்டும் என்பது தெரியாமலேயே இந்த சமூகம் இருந்து விட்டுப் போகுமாக இருந்தால், வாயில் மண் நிறையும் வரை பிளந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
- சஜீர் ஜூனுத்

