தெளிவான இனத்துவ வரையறைக்குள் இலங்கை முஸ்லிம்கள்.

Written By avathani Media Network on Wednesday, March 30, 2016


(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)

"எமது கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் அதிகாரப் பகிர்வுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள்தான் அதிகாரப்பகிர்வை வேண்டினார்கள். அதற்காக போராட்டங்களை செய்தார்கள். சிங்கள மக்களோ, முஸ்லிம் மக்களோ அதிகாரப்பகிர்வை கேட்கவில்லை. நாங்கள் மாத்திரமே அதிகாரப்பகிர்வை கேட்டோம். அதிகாரப்பகிர்வு சகல மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும்." என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மு.கா.வின் தேசிய மாநாட்டில் (19.03.2016இல்) தெரிவித்திருந்தமை மிகப்பகிரங்கமானவை.

மேற்படி உரையில் மூன்று விடயங்களை இரா.சம்பந்தன் அவர்கள் உரத்து வலியுறுத்தியிருப்பதை சற்று ஆழமாக நோக்கினால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். 01. அதிகாரப்பகிர்வு கேட்டவர்கள்தான் பெறவேண்டும், 02. அதற்காக போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும், 03. எது எவ்வாறு இருந்தாலும் அதிகாரப்பகிர்வு சகல மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும்.

இரா.சம்பந்தனின் கூற்றின் பிரகாரம் முஸ்லிம் மக்கள் அதிகாரப்பகிர்வை கோரவில்லை, அதற்கான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்பதை உட்கிடையாக முன்வைத்திருப்பதோடு முஸ்லிம் மக்களுக்கும் சமனான அதிகாரப்பரவலாக்கல் வழங்கப்படவேண்டுமென சாட்டுக்கு முன்வைத்தது போன்றும் எம்மால் இதனை பார்க்க கூடியதாக உள்ளது.

அதிகாரப்பரவலாக்கம் கோருவதென்பது காணப்படும் சூழலுக்கு ஏற்ப எழுகின்ற ஒரு விடயமாகும்.அவ்வாறு முஸ்லிம் மக்கள் அத்தகைய சந்தர்பத்திற்குள் அகப்பட்ட போது அது தொடர்பிலான குரல்களை ஓங்கி ஒலிப்பதற்கு எப்போதும் பின்னிற்கவில்லை. அந்தவகையில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்ட சமூக புறக்கணிப்புக்களின் மையத்தில் நின்று மாற்று தீர்வுகளை வேண்டிய தருணங்கள் வரலாற்றில் உள்ளது.

போராட்டம் என்பதுகூட ஆயுதமேந்தி போராடுவதை மாத்திரம் குறித்து நிற்பதில்லை. மாறாக அகிம்சை வழியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பதிவுகளும் உலகஅரங்கில் பதிவாகாமல் இல்லை. இவ்வாறான சந்தர்பங்களுக்கு ஏற்ற சரியான வழிமுறைகளில் மக்களை அழித்துக்கொள்ளாத ஒரு முறைமைக்குள் இலங்கை முஸ்லிம்கள் தமது முன்னெடுப்புக்களை மேற்கொண்டே இருக்கின்றனர்.

பௌத்த - சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகளின் கோரிக்கையின் பின்னால் அரசாங்கம் கைகட்டி நின்ற வேளைகளில் கூட அதுகுறித்த தமது அதிருப்திகளையும் அதற்காக செய்யப்படவேண்டிய நிவாரணங்கள் பற்றியும் பிரஸ்தாபித்துள்ளனர். 

மதரீதியாக எதிர்ப்புக்கள் மேற்கிளம்பிய சந்தர்பங்கள் தொட்டு நமது உரிமைத்துவம் பாதிக்கும் வகையான சந்தர்பங்கள் வரை அதுகுறித்த தமது போராட்டங்ககளை அகிம்சை வழியில் முன்னிறுத்தியிருக்கின்ற்னர். இதேபோன்றுதான் தமிழ் பேரினவாத ஆதிக்க சக்திகளினாலும் ஆயுதமேந்திய போராளிகளினாளும் தொடுக்கப்பட்ட துவம்சங்களையும் எதிர்த்து தமது நியாயங்களை முன்வைப்பதிலிருந்து முஸ்லிம்கள் விலகியிருக்கவில்லை. 

இவை நமக்கு எடுத்துக்காட்டுவது முஸ்லிம்கள் தமக்கு எதிராக தொடுக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கு அவ்வப்போது தமது எதிர் நடவடிக்கைகளை செயலுருவாக்குவதில் தமது பங்கினை சரியாக கடைப்பிடித்திருக்கின்றனர் என்பதேயாகும். ஆகையால் முஸ்லிம் மக்கள் அதிகாரப்பகிர்வை கோரவில்லையென்றோ அவர்களுக்கெதிரான அநீதிகளை எதிர்த்து நிற்கவில்லை என்ரோ கூறுவது ஒரு அபத்தமான முன்வைப்பென்றே கருதவேண்டும்.

ஏனெனில் ஒரு பிரச்சினை தோன்றுகின்ற பொழுதுதான் அதற்கான மாற்றுவழித்தேடலில் இறங்க வேண்டும். அந்த வகையில் தமிழ் மக்களின் போராட்டத்தின் போதுதான் முஸ்லிம் மக்கள் தமது போராட்டங்களை தொடங்கி இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது அல்லது அதற்கு முன்னரோ பின்னரோ ஆரம்பிக்காபடாததினால் முஸ்லிம் மக்கள் இதுகுறித்து சிந்திக்கவில்லை என அர்த்தப்படுத்துவது அர்த்தமுள்ள கூற்றல்ல.

உண்மையில் தோன்றப்படுகின்ற பிரச்சனைகளின் போது அதுபற்றிய தமது மாற்று நடவடிக்கைகள் தமக்கு எவ்வாறான பரிகாரங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என குரல்கொடுத்திருப்பதும் அதனை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதும் முஸ்லிம்மக்கள் தமது இன்னல்கள் பற்றி உள்வாங்கி அதற்கான நியாயத்தீர்வுகளை தேடி தமது முன்னெடுப்புக்களை முன்னிறுத்தியிருப்பதாகவே இதனைக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதிகாரப்பகிர்வு கோரவில்லையென்றும் போராட்டங்களை முன்னெடுக்கவில்லையென்றும் உண்மைக்குமாறான குற்றச்சாட்டுக்களை குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பரவலாக பேசிவருவதற்கான சூழலை திட்டமிட்டு முன்னெடுக்கின்ற ஒரு கோணத்தை நாம் தரிசிக்க கூடியதாக இருக்கின்றது. இது வெறும் சிலருடைய திடீர்கருத்துக்களாக அல்லாமல் தமிழ் மக்களின் பெரும் அங்கீகாரத்துக்குரிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமான அறிக்கையென்ற பாணியில் வலுப்பெற்று வருவதும் நமக்கு மறைவானதல்ல.

தமிழர்களும் முஸ்லிம்களும் இனத்தால் ஒன்றென்றும் மதத்தால் வேறுபட்டவர்கள் என்ற வாதத்தை முன்வைத்து தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்திற்குள் முஸ்லிம்களையும் உட்படுத்திக்கொள்வதற்கு எடுக்கப்பட்ட பிரயத்தனங்கள் அதிகமாகும். அதுமாத்திரமின்றி இனத்தால் ஒன்றுபட்டும் புறக்கணிப்புக்களால் ஒருமித்தும் காணப்படுகின்ற முஸ்லிம் மக்களுக்காகவுமே தமிழ் மக்களிலிருந்து உருவான அரசியல் கட்சிகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட ஆயுத குழு என்பன செயற்படுவதாக கூறிவந்திருப்பதும் நாம் அறிந்ததே.

அப்படியென்றால் இவ்விடத்தில் இரா.சம்பந்தன் முஸ்லிம்கள் போராடவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்க கூடாது. மாறாக அவர்களும் தம்மோடு சமமாக போராடியவர்கள் என்றுதான் தமது கருத்துநிலையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இது தவிர்க்கப்பட்டிருப்பது அவர்கள் தமக்கு வசதியாக தமிழ் பேசுவோர் என்ற அடைமொழியினுள் முஸ்லிம்களை உட்படுத்துவதும் தமது அரசியல் மேலாண்மையை உறுதி செய்வதற்காக முஸ்லிம்கள் வேறு தமிழர்கள் வேறு என பறைசாற்றுவதும் ஒரு நீண்ட காலமாக கடைப்பிடித்து வரப்படுகின்ற ஒரு கைங்கரியமாகவும் இது உள்ளது. 

எது எவ்வாறு இருந்தாலும் தமிழ் மக்கள் தமது இனத்தை நிறுவுவதற்காக எந்த அடிப்படையை ஏற்றுக்கொண்டாலும் அது அவர்களின் சுதந்திரத்திற்கு உரியதாகும். அதே பொறிமுறையை முஸ்லிம் மக்களும் ஏற்றாக வேண்டுமென்ற ஒரு மறைமுக திணிப்பை முன்னெடுப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஆரோக்கயமான பக்கமல்ல. ஆகையினால் இவ்விடத்தில் தமிழ் மொழியை தாய்மொழியாக முஸ்லிம்கள் கொண்டிருப்பதோ பொதுவான இனத்துவ வரையறைக்குள் முஸ்லிம்களை உள்ளடக்கிப்பார்த்து முஸ்லிம்களும் தமிழர்கள்தான் என ஒருவட்டத்தை போட்டுக்கொள்வதும் ஒரு நேர்மையான இயங்குதளமல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்வதற்கு பின்வரும் அம்சங்களில் நமது கவனத்திரட்சியை நகர்த்த வேண்டியிருக்கின்றது.

இலங்கை முஸ்லிம்களை தனியானதொரு இனமென கொள்ள முடியாது. ஏனெனில் முஸ்லிம் சமூகத்தை ஒரு தேசிய இனமாக கொள்வதற்கு இனம் பற்றிய ஆய்வாளர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோட்பாடுகளுக்குள் முஸ்லிம்களை முழுமையாக உள்ளடக்கிக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதினாலாகுமென்ற காரணம் மேலோட்டமாக கூறப்பட்டு வருகின்றவையாகும்.

இலங்கை முஸ்லிம்களை ஒரு தனியான தேசிய இனமாக அங்கீகரித்துக்கொள்ள முடியாது என்கின்ற சிந்தனை ஏறத்தாழ 150 வருடங்களாக இங்கு இருந்து வருகின்றது. இக்கருத்தினை நமது அண்டைய நாடான இந்தியாவின் தமிழ்நாடு வரை பரப்பியும் வைத்துள்ளனர். இக்கருத்தினை இலங்கை தமிழ் அரசியல்வாதிகளில் பெரும் பகுதியினரும் சில சிங்கள அரசியல்வாதிகளும் விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம் அரசியல் வதிகளும் கொண்டிருப்பது துலம்பரமானது.

இலங்கை முஸ்லிம்கள் தனியானதொரு தேசிய இனமல்லவென்ற கருத்தை முன்வைக்கின்ற ஒவ்வொரு சந்தர்பத்தையும் முன்வைப்போரின் பின்னணியையும் நாம் கூர்ந்து நோக்கின் அந்த சூழலும் அவர்களும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கமின்றி வேறெதுவும் இருக்காமையை புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது.

சேர். ராசிக்பரீட் "எனது உடலில் சிங்கள இரத்தம் ஓடுகிறது என்பதில் நான் பெருமிதப்படுகின்றேன்" என்ற கருத்து தொணிக்க தெரிவித்திருந்தமை முன்னாள் யாழ் உதவிமேயர் "எனது உடலில் தமிழ் இரத்தம் ஓடுகிறது, நான் பெருமைப்படுகிறேன்" என்ற கருத்துப்பட உரைத்தமை.

1885இல் சேர்.பொன் இராமநாதன் "இலங்கை முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள்" என்ற கருத்துப்பட கூறியமை, 1977 தேர்தல் காலத்தில் டாக்டர் இல்யாஸ் "தமிழர்களும் முஸ்லிம்களும் இரத்தக்கலப்பு உள்ளவர்கள்" என்று பிரசாரம் செய்தமை "இலங்கையில் வாழும் அத்தனை முஸ்லிம்களும் தமிழர்களே, அவர்களின் தாய்மொழியும் தமிழே, அவர்களின் சமயம் மட்டும் இஸ்லாம்" என தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த ராணி சஞ்சிகை 1987இல் வெளிப்படுத்தியமை.

"இலங்கை முஸ்லிம்கள் மரக்கலத்தில் வந்து குடியேறிய வந்தேறிகள்" என எஸ்.கே. வடிவேலு வரைந்தமை. "இலங்கையில் இரண்டு பிரதான தேசிய இனங்கள் வாழ்கின்றன" என தினகரன் ஆசிரியர் தலையங்கம் தீட்டியமை. "இலங்கையில் இரு தேசிய இனங்களே உள்ளன, அவை சிங்களவர், தமிழர் ஆகியோரே அந்த இரு இனத்தினராவர்" என தினமுரசு வெளிப்படுத்தியமை.

"இலங்கை முஸ்லிம்களை ஒரு தேசிய இனமென்று கூற முடியாது. இலங்ககையில் சிங்கள தேசிய இனம், தமிழ் தேசிய இனம் ஆகிய இரண்டு தேசிய இனங்களே உள்ளன. இந்த வகையில் முஸ்லிம்களுக்கு அரசியல் சுயநிர்ணய உரிமை இலங்கையில் இல்லை. ஒரு தேசிய இனத்துக்கே சுய நிர்ணய உரிமை இருக்கிறதேயன்றி ஒரு சமூகத்திற்கு அந்த உரிமை கிடையாது." என நவமணி பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் தமிழ் அரசியல் கட்சி பிரமுகர் தெரிவித்தமை.

தமிழ்நாட்டிலிருந்து நமது நாட்டிற்கு வந்த பேராசிரியை பர்வின் சுல்தான், முஸ்லிம் லீக் பிரமுகர் சேக் தாவூத் ஆகிய இருவரும் தாம் பேசுகின்ற தமிழ்மொழியக்கொண்டு கணிக்கப்படுகின்ற இனத்துவ கோட்பாட்டிலிருந்து "தமிழ் மொழி பேசுகின்ற முஸ்லிம்கள் யாவரும் இனத்தில் தமிழர்கள்" என்ற கருத்தை முன்வைத்திருந்தனர். இவைகள் யாவும் இலங்கை முஸ்லிம்கள் ஒரு தனியான இனமல்ல என்பதை கோடிட்டுக்காட்டுவதற்கு பிரயோகிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

இப்படியான கருத்துக்கள் வெளிப்படுவதன் பிரதான நோக்கு அரசியல் ஆதாயம் கருதியென்பதை நாம் தெளிவாக அவதானிக்கலாம். ஆதலால் இதுவொறு குறுகிய மனோபாவத்தினதும் பரந்த சிந்தனைகளுக்கு புறம்பானதும் என்பதை ஆழமாக சிந்திக்கும் எவரும் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியும்.

பொதுவாக இனம் என்ற சொல்லாடல் பிந்தியதாகும். அதற்கு முந்தியதும் இதனை ஒத்ததுமான ஒன்றுதான் சமூகம் என்ற பதமாகும். இதனை பின்வரும் வரைவிலக்கணங்கள் ஊடாக இலகுவாக விளங்கிக்கொள்ளலாம். "இனம் - (மொழி, மதம் போன்ற ஏதேனும் ஒரு காரணஅடிப்படையில் அமையும்) மக்கள் பிரிவு". (க்ரியாவின் தற்கால தமிழ், தமிழ், ஆங்கில அகராதி, பக்கம் - 170.)

சமுதாயம் (சமூகம்) என்பதற்கு "பொதுவான பண்புகளையும் நியதிகளையும் கொண்டு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் தொகுதி". என வரையறுக்கின்றது. (க்ரியாவின் தற்கால தமிழ், தமிழ், ஆங்கில அகராதி, பக்கம் - 544)

ஒரு தேசிய இனத்தை அளவிடுவதற்கு பின்வரும் பண்புகள் அளவுகோள்களாக பெரும்பாலானவர்களினால் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தேசம் அல்லது அரசியல் அடையாளம்.
மொழியல்
கலாசாரம்
பௌதீகவியல் (நிறம், தோற்றம் - அமைப்பு, தோல், குருதி, பாரம்பரியம்)
மதம்

இனம் பற்றிய சிந்தனைகளில் மானிடவியல், சமூகவிஞ்ஞான அறிஞர்கள் தமக்கிடையே அளவீடு சம்பந்தமான பண்புகளை ஒன்றுக்கொன்ரு வேறுபாடாக முன்மொழிந்து வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் பிரதேசத்திற்கு பிரதேசம் நாட்டுக்கு நாடு சமூகத்திற்கு சமூகம் மாறுபாடான அளவீடுகளை பிரயோகித்திருப்பதையும் காணலாம்.

இனம் என்ற சொல் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு பின்னரே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது. ஐரோப்பிய மொழிகளில் இனம்(Ethenic) என்ற சொல் ஆறாம் நூற்றாண்டிலிருந்தே கையாளப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

"உடலியல் கூறுகளினால் - பண்புகளினால் ஒரு குழுவினரிடமிருந்து வேறுபடும் இன்னொரு குழுவினரைக் குறிக்கும்." பொருளில் இனம் என்ற சொல் பயன்பட்டது மிக அண்மையில் என்பதும் ஆய்வுகள் தருகின்ற இன்னொரு முடிவாகும்.

இவ்வாறு தேசிய இனம்பற்றி பல வரையறைகள் இருந்த போதிலும் கம்யூனிசிய கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்டாலினின் கருத்தான "பொதுவான மொழி, வாழ்புலம், பொருளாதார வாழ்வு, பொதுவான கலாசாரம் உடைய வரலாற்றுப் பாரம்பரியம் உடையவர்களுமான மக்கள் குழுவே" ஒரு தேசிய இனமாகும் என்ற கூற்றினை பலர் ஏற்றிருப்பதனை நாம் காணலாம்.

தேசிய இனத்துவம் பற்றிய ஸ்டாலினின் சிந்தனைகள் - கோட்பாடுகள் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செயலிழந்தாக அல்லது பொருளற்றதாக மாற்றப்பட்டிருப்பதை வரலாறு நமக்கு விபரிக்கின்றது. இனத்துவ அளவீடுகளில் மதமும் ஒரு சமூகத்தை தனியான இனமாக அடையாளப்படுத்த பயன்பட்டிருப்பதை மானிடவியளாளர்களும் சமூக ஆய்வாளர்களும் இக்காலத்தில் ஏற்றுள்ளனர்.

"இனக்குழு என்பதனால் கருதப்படுவது யாதெனில், வரலாற்று ரீதியாக வரையறுக்கப்பட்ட சுய உணர்வுள்ள ஒரு சமூகமாகும். அதற்கு பெரும்பாலும் மொழி, சமயம் முக்கிய அம்சங்களாக அமைந்த சிறப்பான வரலாறும் பண்பாடும் உண்டு" என சேனக்க பண்டாரனாயக்கா சுட்டிக்காட்டுள்ளார்.

சமய அடிப்படையில் ஒரு தனித்துவமான சமூதாயம் நீண்ட நாட்களாக வாழ்ந்துவருவார்களாயின் அவர்களை மத அடிப்படையிலான சுய அடையாளம் தேசிய இனச் சுயநிர்ணய உரிமை பெற தகுதியுடையவர்களாக கொள்ளலாம். இதற்கு முன்னாள் "யூகோஸ்லாவியாவில் முஸ்லிம், கத்தோலிக்க மரபு சார்ந்த கிறிஸ்தவர் தனித் தேசிய இனங்களாக அடையாளப்படுத்தப்பட்டதை உதாரணங்களாக கொள்ளலாம்.

இந்தியாவின் பஞ்சாபில் மொழியை அடிப்படையாக கொள்ளாது சமயத்தை அடிப்படையாக கொண்டு மாநில அரசு வழங்கப்பட்டமையும் பொது மொழி மட்டும் ஒரு தேசிய இனத்தை உருவாக்கிவிடாது. அதேநேரம் தொடர்ச்சியான பிரதேசம் அவசியமான பண்பாயினும் இதுவும் ஒரு தேசிய இனத்தை நிர்ணயிக்க நிலையான சான்றல்ல என்பதும் வரலாற்று உண்மைகளாகும்.

"இலங்கையில் வாழும் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் யாவரும் ஒரே வகையான உடலியற் பண்புகளை கொண்டிருந்த போதிலும் வெவ்வேறான இனக்குழுக்களாகவே உள்ளனர். தனித்தனி இனக்குழுக்களாக இவர்களை வேறுபடுத்துவன சமயம், மொழி ஆகியவையும் ஏனைய பண்பாட்டு தனித்தன்மைகளுமாகும்" என சித்திரலேகா மொனகுரு குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கதாகும். (நன்றி - இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்)

"இலங்கையில் இனம் கட்டமைக்கப்பட்டுள்ளமை சிங்களவர், தமிழர், முஸ்லிம் மற்றும் வேறு மக்கள் தொகுதியென்ற அடிப்படையிலுமாகும் என எம்.ஒ.எ.டீ சொய்சா எம்.எ சுட்டிக்காட்டியுள்ளார். ஆயின் இலங்கை முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமாகவே கொள்ளப்படுகின்றனர். அதேநேரம் இனத்துவ கோட்பாடுகளும் ஏற்றுக்கொள்கின்ற ஒன்றில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமல்ல என குறிப்பிடுவது முன்னர் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட ஒரு அம்சத்தில் புதிய அபிப்பிராயத்தை தோற்றுவிப்பதாகவே அமையும்.

இலங்கை முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகத்தில் எந்த இடத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் தங்களை அடையாளப்படுத்த மதத்தையே பிரயோகிப்பது அவர்களுக்கான ஒரு தனித்துவ அம்சமாகவும் நீண்ட பாரம்பரியத்தையும் கொண்டிருக்கின்றது. இதனால் இரத்த உறவு, பாரம்பரியங்கள், கலாசாரம் போன்றவற்றுக்கு அப்பால் சமயத்தினைக்கொண்டு தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு இலங்கை முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. 



இப்பண்பு நேற்று இன்று தோன்றிய ஒன்றல்ல. 20ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே அதாவது மனித உற்பத்தியான நபி ஆதம் (அலை) அவர்கள் இப்புவிக்கு வந்த காலம்தொட்டே முஸ்லிம்கள் மதத்தின் மூலமே தங்களை அடையாளப்படுத்தி வந்துள்ளனர். என்பதே குர்ஆனின் கூற்றாகு
ம்

ஸ்டாலின் போன்றவர்களுக்கும் மானிட சமூக ஆய்வாளர்களுக்கும் முன்னரே முஸ்லிம்களின் அடையாளம் நிறம், கோத்திரம், மொழி, இரத்தம், பிரதேசம், தோல் போன்ற தன்மைகளினால் அடையாளப்படுத்த முடியாதென்றும் அவர்களின் தனித்துவமான சுயஅடையாளம் மதம் சார்ந்தது என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். எனின், இலங்கை முஸ்லிம்களின் சுயஅடையாளம் மதத்தின் வழிநின்று பெறத்தக்கதாகும்.

"முஸ்லிம்களை பொறுத்தவரை இஸ்லாத்தின் மத அடையாளத்திற்கு முன்னர் அவர்களது வேறுபட்ட இனக்குழுமவ மூலங்கள் முக்கியத்துவமற்றவை ஆகிவிட்டன". (நன்றி - பேராசிரியர் அமீர் அலி - முஸ்லிம் சாகியத்தின் பண்முக அடையாளங்களும் அரசியல் தேர்ந்தெடுப்புக்களும், பக்கம் - 08)

"தமிழ் பேசுபவராக இருந்தார்கள் அல்லது தமிழ் பேசுபவர்கள் ஆனார்கள். அதே வேளை சமூக அடிப்படையில் சிங்களவர்களிடமிருந்தும் தமிழர்களிடமிருந்தும் வேறுபட்ட அவர்களை இனரீதியாக பிரித்துக்காட்ட இஸ்லாம் உதவியது". (நன்றி - கலாநிதி தேவநேசன் நேசையா, இனத்துவம், பக்கம் -04)

"சிங்களவரும் தமிழரும் தத்தம் மொழியை பேசுவது போன்று சோனகரும் தமிழை தங்கள் சொந்த தேசிய மொழியாக கருதி பேசுகிறார்களா அல்லது கடன் வாங்கப்பட்ட ஒரு மொழியாக பேசுகிறார்களா?..."

"இந்தியாவின் இப்போதைய பாரசீகர்கள் அவர்களின் பேச்சுமொழி குஜாராத்தி ஆகும், பாரசீக மொழி மேலும் அவர்களது மொழியாக இருக்கவில்லை அப்படியாயின் அவர்கள் பாரசீக வழித்தோன்றல்கள் அல்ல என்று தீர்மானிக்க முடியுமா?...(நன்றி - ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் , இலங்கைச் சோனகர் இன வரலாறு)

ஆகவே இலங்கை முஸ்லிம்கள் தமது தாய் மொழி போன்று தமிழை உபயோகிப்பதனால் அவர்கள் தமிழர்கள் என வரையறுத்துக் கொள்வதற்கு சாத்தியமில்லை. இதனை மேற்சுட்டிக்காட்டிய மொழிக்கடன் வாங்குதலினால் தமது ஆரம்ப மொழியை முற்றாக கைவிட்டு விடுகின்ற ஒரு நடைமுறை உலகில் காணப்படுகின்ற ஒன்றாகவே நாம் பார்க்க முற்பட்டால் சரியான முடிவுகளைப் பெற முடியும்.

"இஸ்லாமிய தமிழர், சிங்கள முஸ்லிம்கள்" போன்ற அடைமொழிகளினால் முஸ்லிம்களை அழைப்பதோ, கணிப்பதோ, அடையாளப்படுத்துவதோ அறிவுபூர்வமான நடவடிக்கை அல்ல. உண்மையில் இலங்கை முஸ்லிம்கள் ஒரு தனியான தேசிய சமூகமாக அடையாளம் காணப்பட்டு அரசியல் சுயநிர்ணய உரிமை உடையவர்களாக இணம் காணப்பட்டுள்ளனர் என்பதே எதார்த்தமாகும். இதிலிருந்து விலகிச்செல்வதற்கு ஏதுவான எந்த காரணங்களும் இல்லை.

இதனால்தான் இரா.சம்பந்தன் அவர்கள் கூட அதிகாரப்பகிர்வு சகல மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டதன் தாற்ப்பரியமாக பார்க்க வேண்டுமே தவிர ஏதோ எமக்காக அவர் குரல் கொடுத்தவராகவோ விட்டுத்தந்தவராகவோ இல்லையென்பதுதான் நாம் இன்று உணரவேண்டிய பக்கமாகவும் உரத்துச்சொல்ல வேண்டிய பேசுபொருளாகவும் தமக்கிருக்கின்றது.

எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது 
MMM.NoorulHagu 129/B OsmanRoad Sainthamaruthu - 05 0772612094





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.