கவிதை சுகப் பிரசவம்

Written By avathani Media Network on Monday, February 29, 2016


(எம்.எல்.எம்.அன்ஸார்)  
இன்று கவிதையை பெற்றுப்போட்ட நேரம்
இரவு பதினொரு மணி!
*
பகல் இரண்டரை  மணியளவில்
பக்கத்து வீட்டுக்காரி துணி துவைத்ததை  
எட்டிப் பார்க்க முயற்சிக்கையில்
அவளது தோட்டத்துப் பூவில்
இடறி விழுந்துவிட்டது மூளை.
அந்த நேரம் எடுத்தது கவிதை நோக்காடு!
*
முக்கி முக்கி முயன்று
மூளை பட்ட அவதி
கூட உதவிக்கு நின்றிருந்த
பேனாவுக்கும் தாளுக்கும்தான் தெரியும்!
*
நாளைக்குக் காலை பிரசவித்தால் போதும்
வலியை ஒதுக்கி வை என்று
மூளைக்கு தூக்கத்தை விழுங்கக் கொடுத்து
அவசரத்தை அடக்கப் பார்த்தேன்.
*
நடுச்சாமம் ஆனாலும்
கவிதையை ஈன்று தள்ளிவிட்டுத்தான்
கட்டிலை விட்டு இறங்குவேன் என்று
அடம்பிடித்துவிட்டு  
கடைசியில் வென்றும் விட்டது மூளை !
*
சிரித்த முகத்துடன்
கைக்கு வந்து இறங்கியது கவிதை!
*
சுகப்பிரசவம் நிகழ்ந்த சந்தோசத்தில்
கவிதையை குளிப்பாட்டி பெயரும் வைத்து
நீயே ஏந்திக்கொள்
என்று  என்னிடம் தூக்கித் தந்துவிட்டு
ஓய்வு அறைக்குச் சென்றுவிட்டது மூளை!

22-12-2015
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.