(எம்.எல்.எம்.அன்ஸார்)
சொந்தக் காரர்களைப்போல
சுகம் விசாரிப்பதற்கு
எனது முற்றத்திற்கு
வந்த மழை
மூன்று நான்கு நாட்கள்
தங்கிவிட்டுச் செல்லும்
ஆசையில் இருந்தது!
*
மழை வரும் போது ஒரு பெட்டி நிறைய
மரங்கள் பருகிச் சுவைப்பதற்கு
இனிப்புப் பானங்களும்
எடுத்து வந்திருந்தது!
*
என் வீட்டுக்கு மேல்
மொட்டை மாடியில்
பகலில் வசிக்கின்ற
வெயில் ஒருபோதும்
என்னோடு நட்பாக இருந்ததில்லை.
மழை வருவதற்கு முதல்
நாள் கூட
அது கூட்டிப் பெருக்கிய
வெக்கையையும் வியர்வையையும்
என்மீது குப்பை கொட்டி
தொல்லை படுத்தியது!
*
இப்படி மழை வந்து
ராவு பகலாக நாட் கணக்கில்
தங்கி
மரங்களுக்கு சமைத்துக்
கொடுத்து
விருந்து வைப்பது
வெயிலுக்கு சரியான கோபமும்
பொறாமையும்!
*
திடீரென வந்த மழையில்
சந்தேகம் இருப்பதாக
சூரியனிடம் போய் முறையிட்டு
மழையை காட்டிக் கொடுத்து
விட்டது வெயில்!
*
இன்று காலை வந்த சூரியன்
மழையைக் கைது செய்து
விசாரணைக்காக அழைத்துச்
சென்றுவிட்டது!
*
ராவு முழுக்க மழை ஆக்கிப் போட்டதை
வயிறு உண்டு ஏப்பமிட்ட களைப்பில்
விடிந்ததும் தெரியாமல்
உறங்கிக் கிடந்த மரங்கள்
நேரம் பிந்தி எழுந்து
பார்த்த போது
மழை காணாமல் போயிருந்ததைக்
கண்டு
வடக்கு கிழக்கு தமிழ்
இளைஞர்களைப் பறிகொடுத்த
அம்மாக்களைப் போல இடிந்து
போயின!
15-02-2016

